சற்று முன்னர் ஜனாதிபதி பாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயம்!!

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.183 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி பாகிஸ்தான் புறப்பட்டு சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் அழைப்பின் பேரில், அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருக்க உள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷாஹிட் காகன் அப்பாசி ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இளைஞர் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் வெளிநாட்டுச் சேவை கல்வியகம், இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவகம் மற்றும் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகளுக்கான நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

அத்துடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்திற்கான நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் பொதுக் கொள்கைக்கான தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கிடையிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றக உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது விஜயத்தின் போது இஸ்லாமாபாத்தில் உள்ள இராஜதந்திர வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


காணாமல் போனோர் குறித்து தீர்வு வழங்கப்படும் - ஜனாதிபதி

காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரியின் ஆய்வுக்கூடம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி சென்ற வேளையில் காணாமல் போனோரின் உறவினர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஜனாதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் மூவரை மாத்திரம் அழைத்து கலந்துரையாடினார்.
இதன்போது உரிய தீர்வினை பெற்றுதருவதாக வாக்களித்திருந்தார.

அதற்கிணங்க காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை - இளஞ்செழியன்

பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை. பிள்ளைகள் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவதால் கைது செய்யப்பட, பெற்றோர் நீதிமன்றில் வந்து அழுது மன்றாடுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை. 

இலங்கைச் சட்டத்திலுள்ள உரிமைகளின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படுவதால் அவர்கள் வெளியே வந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நிலைதான் காணக்கூடியதாக உள்ளது” இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார். 

உயிருள்ள கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பம் மீதான கட்டளையின் போதே மேல் நீதிமன்ற நீதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

உயிருள்ள கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் அன்றிலிருந்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சார்பில் பெற்றொரால் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. 

பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கினார். “சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா பணத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும்.சந்தேகநபர் சார்பில் தலா 5 லட்சம் பெறுமதியுடைய 2 ஆள் பிணையாளிகள் கையொப்பமிட வேண்டும். ஆள் பிணையாளிகள் நீதிவானால் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். 

சந்தேகநபர் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” ஆகிய நிபந்தனைகளின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கிக் கட்டளை வழங்கினார்.


மஹிந்தாநந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!!

29 லட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சாட்சி விசாரணை மே மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, கிஹான் குலதுங்க முன்னிலையில் இது குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத்திற்கு உரிய நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகேவிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தொலைபேசி ஊடாக அழைத்து மூன்று கணக்குகளில் 29 லட்சம் ரூபாவை வைப்பிலிடுமாறு கூறியதாக அந்த தொழிற்சங்கத்தின் பொருளாளராக செயலாற்றிய நாவலகே டக்ளஸ் இன்று நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

இதன்படி முன்னாள் அமைச்சரின் கணக்கில் 14 லட்சம் ரூபாவும், அலுவலக அதிகாரிகளின் கணக்கில், 5 லட்சம் ரூபாவும், பாதுகாப்பு அதிகாரிகளின் கணக்கில் 10 லட்சம் ரூபாவும் வைப்பிலிட்டதாக அவர் குறிப்பிட்டார்.


போதையில் அடித்துக் கொல்லப்பட்ட நபர்!!!

திருகோணமலை - புல்மோட்டையில் இருந்து திருகோணமலை செல்லும் வீதியில் சுமார் 2கிலோ மீற்றர் தூரத்தில், அடி காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய புல்மோட்டை காவல்துறையால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயதான புல்மோட்டை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சடலத்தின் அருகில் காலியான மது போத்தலும், நொருக்குத்தீனியும் காணப்படுவதால், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நிகந்த கொலையாக இது இருக்கலாம் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை புல்மோட்டை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை!!!

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பிராந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தில் கடமையாற்றி வந்த இந்த யுவதி எழுதியுள்ள கடிதத்தில் “அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர் தான் தனது மரணத்திற்கு காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்வேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன், பெரும் தொகையான பணத்தை தான் திருடி விட்டதாக தெரிவித்து தற்போது அச்சுறுத்துவதாகவும், எனவே தான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் குறித்த சட்டத்தரணியிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரியாலை துப்பாக்கி சூட்டில் கைதான அதிரடிப்படையினர் இன்று பிணையில் விடுவிப்பு!!

மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் இன்று விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம். 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். 

இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படை முகாமில் கடையாற்றிய மல்லவ ஆராய்ச்சிகே பிரதீப் நிசாந்த மற்றும் ரத்நாயக்க முதியான்சலாகே இந்திக புஸ்பகுமார ஆகிய சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் இருவரும் அன்றிலிருந்து சுமார் 5 மாதங்களாக யாழ்ப்பாணம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சார்பில் சட்டத்தரணி மோகனதாஸ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார். 

அதன் மீதான கட்டளை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டது. “சந்தேகநபர்கள் இருவரும் 50 ஆயிரம் ரூபா பணத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும். சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 5 லட்சம் பெறுதியுடைய 2 ஆள் பிணையாளிகள் கையொப்பமிட வேண்டும். 

ஆள் பிணையாளிகள் நீதிவானால் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சந்தேகநபர்கள் இருவரும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” ஆகிய நிபந்தனைகளின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கிக் கட்டளையிட்டார்.


இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு!!!

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து, அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்துக்காக இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர். 

இந்த வழக்கில் இராணுவப் புலனாய்வாளர்களான, தமிழர்களான காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணியம் சிவரூபன் ஆகியோரும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேனவும் எதிரிகளாகக் கைது செய்யப்பட்டனர். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. 

சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த வழக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழக்கை நெறிப்படுத்தினார். முதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் , மூன்றாவது எதிரியான இராணுவச் சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவாவும் முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.