வேட்டி அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

கனடாவில் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடா பாராளுமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இன்று கனடாவில் உள்ள தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அப்போது, தமிழ் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் வைத்தார்.
இவ்விழாவில் டோரண்டோ மாநகர மேயர் ஜான் டோரியும் கலந்து கொண்டார். ஜஸ்டின் மற்றும் ஜான் இணைந்து பொங்கல் சமைத்தனர். பின்னர் ஜஸ்டின் தமிழ் மக்களிடையே பேசினார். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படத்துடன் பொங்கல் வாழ்த்துகளையும் டுவிட் செய்துள்ளார். அதில் அனைவருக்கும் இனிய தை பொங்கல் மற்றும் தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்கள் என தமிழில் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜஸ்டின் தமிழ் பாரம்பரிய விழாக்களை கொண்டாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் இந்த முயற்சி மகிழ்ச்சியளிப்பதாக கனடாவாழ் தமிழர்கள் கூறுகின்றனர்.