இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தங்கள்!!

லண்டனில் கடந்த வாரம் இலங்கையர்களைச் சந்தித்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பைத் தளமாகக் கொண்ட சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அண்மையில் கண்டியில் இனவன்முறைகள் ஏற்பட்ட போது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சமூக ஊடகங்களைத் தடை செய்திருந்தது. சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு சில வெளிநாட்டுத் தூதுவர்கள் அழுத்தங்களைக் கொடுத்தனர் என்றும் அரசாங்கத்துக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டனர் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

சில நாட்டுத் தூதுவர்கள் தமது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து இந்தச் சந்திப்பில் அதிகம் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சந்தடிசாக்கில் மேற்குலக இராஜதந்திரிகளையும் தாக்கியிருக்கிறார்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகள் தான் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் தடையை நீக்குமாறும் கோரியிருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாரென்று குறிப்பிடாமல் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பினும் அது யாருக்குப் பொருந்தும் என்பதும் யாருடன் தொடர்புடையது என்பதும் அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் நன்றாகவே தெரிந்த விடயம் தான்.

சமூக ஊடகங்களின் தடை மற்றும் அதையடுத்து எழுந்த நிலைமைகள் எல்லாம் தணிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுபற்றிப் பேசியிருக்கிறார்.

அதுவம் 2018ம் ஆண்டு எஞ்சியுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 35 மில்லியன் டொலர் நிதியுதவியை செலவிடுவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ள சூழலில் தான் ஜனாதிபதியின் இந்தக் கருத்தும் வெளியாகியிருக்கிறது.

2018ம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியின் செலவுக்காக 13 ட்ரில்லியன் நிதியை ஒதுக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.

ஆனாலும் வெளிநாடுகளுக்கான உதவிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக இலங்கைக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடும் போது அமெரிக்க இராஜாங்கச் செயலர் சில உத்தரவாதங்களை சான்றுகளை அளிக்க வேண்டும் என்பது அமெரிக்க காங்கிரஸின் நிபந்தனையாகும்.

அமெரிக்க காங்கிரஸின் இந்த நிபந்தனைகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடாக நேரடியாகவே இலங்கைக்கு கடிவாளம் போடுவதாகவே இருக்கும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 30/1 தீர்மானத்துக்கு அமைய நம்பகமான நீதிப் பொறிமுறையை இலங்கை உருவாக்கியுள்ளது என்றும், சித்திரவதைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும்.

இது பற்றி அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவுத் திட்டக் குழுக்களுக்கு அறிக்கை சம்ர்ப்பிக்க வேண்டும். இது முதலாவது நிபந்தனை.

காணாமற்போனோர் பணியகம் உருவாக்கப்பட்டு காணாமற்போனோரின் நிலையைக் கண்டறிய வேண்டும். போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். ஆயுதப்படைகளை மறுசீரமைக்க வேண்டும். ஆயுதப்படைகளின் அளவைக் குறைக்க வேண்டும் என்று இலங்கைக்கு அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்துள்ளது அமெரிக்க காங்கிரஸ்.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த ஆண்டில் இலங்கைக்கான நிதியுதவிகளை வழங்க முடியும். ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த நிபந்தனைகளுக்கு இணங்குமா என்பது தான் சிக்கலான விடயம்.

காணாமற்போனோர் பணியகம் மாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பகமான விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படவில்லை. அது தொடர்பாக அரசாங்கம் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவுமில்லை.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்களின் உதவியுடன் நம்பகமான கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் கலப்பு விசாரணை நடத்தப்படாது, வெளிநாட்டவர்கள் விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூறி விட்டதாக ஜனாதிபதி அண்மையில் கூட கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் எந்த அடிப்படையில் உருவாக்கப் போகிறது. அது அமெரிக்காவின் நிதியுதவிக்கான அடிப்படைத் தேவைகளை எவ்வாறு ஈடு செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் பற்றிய பட்டியலை வெளியிட வேண்டும் என்பது காங்கிரஸின் மற்றொரு நிபந்தனை. ஏற்கனவே இந்தப் பட்டியலைப் பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் அமெரிக்காவும் இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்கத் தொடங்கியிருப்பது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை தரக் கூடியதொரு விடயமாக இருக்கும்.

ஏனென்றால் போரின் இறுதியில் சரணடைந்தவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டால் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் எங்கே என்ற கேள்விக்கும், அதற்குக் காரணம் யார் என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

அதேவேளை இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணங்கியிருக்கிறது. அதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுமையாக நடைபெறவில்லை.

அவ்வாறு முழுமையான மறுசீரமைப்புகள் நடந்திருந்தால் ஐநா அமைதிப்படைக்கு இலங்கைப் படையினரை அனுப்பும் விடயத்தில் இராணுவம் சிக்கல்களை சந்திக்கின்ற நிலை தோன்றியிருக்காது.

அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் விதித்துள்ள நிபந்தனையை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் குறைவே.

ஏனென்றால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முனையும் போது அதற்கு சிங்கள தேசியவாத தலைமைகளும் சக்திகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவிப்பார்கள் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஏற்கனவே இந்த விடயத்தில் அரசாங்கம் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. எனவே படைக் குறைப்பு விடயத்தில் அரசாங்கம் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காது.

அதுமாத்திரமன்றி இலங்கைப் படைகளுக்காக வெறும் 5 மில்லியன் டொலர்களை மாத்திரம் வழங்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதனையும் கூட அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

வெளிநாடுகளில் ஐநா அமைதிப் படையில் பணியாற்றிய போது பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இலங்கைப் படையினருக்கு எதிரான நம்பகமான நநீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் கருவிகளை வழங்க முடியும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் கூறியிருக்கிறது.

அமெரிக்க காங்கிரஸின் இநந்த நிபந்தனைகள் இலங்கைக்கான உதவிகளை வழங்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்துக்கு கடிவாளம் போடுவதாக அமைந்திருக்கிறது.

இதனால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்திடம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு அழுத்தங்களைக் கொடுக்கும். ஏனென்றால் முன்னரைப் போன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த விடயத்தில் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் உறுதியளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்றக் குழு முன்பாக அறிக்கையளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது அமெரிக்க காங்கிரஸ்.

இதனால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் மென்மையான உறவுகளைத் தொடர முடியுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் போர்க்கால மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளை முன்னிறுத்தி அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வந்தது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்த அழுத்தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தியது. இப்போது சில விடயங்கள் தவிர மற்றெல்லாக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியப் போக்கைப் பின்பற்றுகிறது என்பதைத் தெரிந்திருந்தும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கத் தவறியிருந்தது.

இந்த நிலை இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச அழுத்தங்களை் குறித்த அச்சத்தைப் போக்கி விட்டது. தமக்கு வசதியான அரசாங்கம் என்பதால் அமெரிக்காவும் மேற்குலகமும் கண்டுகொள்ளாது என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதுதான் சர்வதேச கட்டுப்பாடுகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருவதற்கு காரணம்.

இப்படியானதொரு சூழலில் தான் அமெரிக்க காங்கிரஸின் நிபந்தனைகள் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றன. அமெரிக்கா அளிக்கும் நிதியுதவிகள் பெரியதல்ல. ஆனால் அமெரிக்கா அதனை முன்னிறுத்தி கொடுக்கப் போகின்ற அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

ஏற்கனவே அமெரிக்கா இதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கத் தொடங்கியிருக்கலாம். அதனால் கூட வெளிநாட்டுத் தூதுவர்கள் அதிகாரத்தை மிஞ்சி செயற்படுகிறார்கள் என்று ஜனாதிபதி கூறியிருக்கலாம்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி