சிரியாவின் பிரச்சனைகள் தீர ரஷ்யாவின் உதவி வேண்டும்!!


சிரியாவில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க ரஷ்யாவின் உதவி வேண்டும் என்று ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹீகோ மாஸ் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார்.

பெர்லினில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், சிரியாவில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கு ரஷ்யாவிடம் இருந்து ஆக்கபூர்வமான பங்களிப்பு தேவைப்படுகிறது. எனவே சிரியா மக்களின் நன்மைக்காக ரஷ்யா உதவ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அதிபர் ஆசாத் படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும்ம் குழந்தைகளும் பலியாயினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுபடைகள் சிரியாவில் நடத்திய ஏவுகனை தாக்குதலுக்கு பிறகு மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வித குழப்பமான மோதல் போக்கு நிலவுகிறது.

சிரியா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக சிரியாவில் அமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதல் நடைபெற்ற பின்பு அதை வரவேற்பதாக ஜேர்மன் சான்ஸ்லர் ஏங்கலோ மெர்க்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிரியாவில் அமைதி நிலவ ரஷ்யாவின் உதவி வேண்டும் என முரண்பாடாக செய்தியாளர்களிடம் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காததால் மெரிக்கலின் கன்சர்வேடிவ் கட்சியுடன் SPD கட்சி கூட்டணி அமைத்தது. அதன் பின் நான்காவது முறையாக மெர்க்கல் ஜேர்மனியின் சான்ஸ்லராக பதவியேற்றார்.

உக்ரைன் மற்றும் சிரியா விவகாரங்களில் ரஷ்யாவிற்கு எதிரான மனநிலையில் மெர்க்கல் உள்ளார், ஆனால் SPD கட்சி ரஷ்யாவுடன் நீண்டகாலமாகவே நெருக்கமாக இருந்து வருகிறது.

எனவே SPD கட்சியை சேர்ந்த ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹீகோ மாஸ் சிரியா விவகாரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி