சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் முல்லைத்தீவு மீனவர்கள் மேலும் கூறுகையில்,

மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோத மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலையிழுத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இதனால் எமது தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் வட மாகாண விவசாய மற்றும் கடற்தொழில் அமைச்சர், மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இவ்வாறு சட்டவிரோத தொழில்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 72 படகுகளுக்கு மாத்திரம் தொழிலுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது 250இற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோதமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, செம்மலை கிழக்கு, நாயாறு, வெலிஒயா போன்ற பகுதிகளிலும் அதிகளவான சட்டவிரோத தொழில்கள் இடம்பெற்று வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி