சபிக்கப்பட்ட இதயத்திலிருந்து

சபிக்கப்பட்ட  இதயத்திலிருந்து
_______________________________
இரவுகளைத் தொலைத்து
பீறிட்டெழுந்த பகல்களிடம்
பறிபோனது தேசம் மாத்திரமல்ல
வழியொளியாகும் கல்வியும்தான்
விட்டில் பூச்சிகளின் தட்டில்
தஞ்சம் புகுந்தோடிய காலமது
சபிக்கப்பட்ட தேசத்திலின்று
சரித்திரம் தீட்டத் துடிக்கும்
ஓர் கிறுக்கனின் புலம்பலிது
தம் உடல்களை தாமே கிழித்து
விருப்புப் பெயர்களை பச்சை குத்தி
இச்சையாடும் இக்காலக்
கணிப்பிலிருந்து பின்நோக்கி மீட்டியபடி விழித்துக்கொண்டிருக்கிறேன்
வனக்காடுகள் என் தேசத்தை
சூழ்ந்திருந்த போதும்
இசையோடிணைந்த தென்றலின்
வருடலும் வன்னித் தாய் நிலத்தின்
வள மேன்மையும் தாங்கியிருந்தது
பிணக்காடுகள் என்ற பெயரின்
பதப் பாட்டை அறிந்திருக்கவில்லை.
பயமறியா இளங் கன்றைப் போல
என் கால்கள் காடுகளை பரவியபடி
சிட்டுக் குருவிகளின் வேட்டையிலும்
குட்டிக் குறும்புகளுடன் ஓடிப் பிடித்து
ஒளிந்திருந்து அடிப்பதிலும்
அலாதிப் பிரியம் அன்றைய நாட்களில்
இன்று கால்களைப் பறிக்கிறதாம்
கண்ணிவெடிக் காடுகள்.
வெள்ளைச் சீரூடையில் பட்டாம் பூச்சி
பிடிப்பதும் நாவல் மர நிழலில்
கில்லி கோளிகுண்டு அடிப்பதும்
வீட்டுக்கு தெரியாமல் பாடசாலை விடுமுறை எடுப்பதும் கல்வி நேரத்தில்
காகிதத்தில் காதல்த் தூது விடுவதும்
கணக்குப் பாடத்தில் ஐந்து
புள்ளி எடுப்பதும் விளையாட்டு
தருணங்களில் நடிகனாய் மாறுவதும்
மனதிலே மறவாத சுவடுகள் எமக்கு.
இவையனைத்தும் சில ஆண்டுகளின்
முற்றுப்புள்ளி கோடுகளாகின
பின் இரவுகளென்று இருக்கவில்லை
தோட்டாச் சன்னங்களும் வெளிச்சக் கழுகுகளுமே சுற்றித்திரிந்தன
வகுப்பறையில் இருக்கும் நேரத்தைவிட
பதுங்குழியறையில் பயந்திருந்த
நாட்களில் தான் சபிக்கப்பட்டது
இந்த உலகினால் புறக்கணிக்கப்பட்ட
என் இதயத்தின் சுவடலைகள்.

வன்னியூர் கிறுக்கன்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி