நாட்டில் எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படவில்லை - மைத்திரி

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் சகல இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதானது சிங்கள ஆட்சியாளர்களின் நினைப்பு எவ்வாறாக உள்ளதென்பதை பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் யுத்தம் இல்லையென்றால் அது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பதே அவர்களின் பார்வையாகவுள்ளது.ஆனால் நாட்டில் எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படவில்லை என்பதே உண்மை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கை ஆட்சியாளர்கள் இல்லாது செய்து விட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப் பட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர்.தமிழர் தாயகம் முழுவதும் படையினரின் களமாக மாற்றப்பட்டுள்ளது.

காணாமல்போனவர்கள், கைது செய்யப் பட்டவர்கள் என்ற ஒரு பெரும் துன்பப் பட்டியல் தமிழினத்தை வாழ முடியாதவர்களாக ஆக்கியது.

இதனிடையே காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு வருடம் கடந்து விட்டது.தவிர, படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காகத் தமிழ் மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்னும் நீண்டு செல்கிறது.

நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது எந்த வகையில் நியாயமானதென்பதை சர்வதேச சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும் நாட்டில் நிலவுகின்ற அமைதியை தவறான கற்பிதத்திற்குள் யார் கொண்டுவர நினைத்தாலும் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் தரித்த படையினர் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றனர்.

தமிழர் தாயகத்தில் தரையிலும் வானத்திலும் கடலிலும் சஞ்சரிக்கும் படையினரின் முழு நோக்கமும் தமிழ் மக்களை எந்நேரமும் அச்ச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது தான்.

கோயில் கட்டிடமென்றால் கூட அங்கு புலனாய்வுத்துறை வந்து விடுமளவில் தான் தமிழரின் வாழ்வியல் அமைந்திருக்கிறது.

நிலைமை இதுவாக இருக்கையில், ஜனாதிபதி அவர்கள் லண்டனில் கூறிய நல்லிணக்கத்தைக் கேட்கும்போதெல்லாம் தலைவெடித்துப் போகும்போல் உள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி