அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து கோபமடையும் சீனா!

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இப்போது சீனாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டிஜி போட்டியில் சீனா தனது முதலாவது கடல் கடந்த தளத்தை நிறுவிய பின்னர் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மேலும் பல தளங்களை சீனா நிறுவப் போவதாக ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் பசுபிக் தீவான வனாட்டுவில் சீனா கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

வனாட்டுவில் சீனாவின் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால் அத்தகைய எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று வனாட்டு தீவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.

சீனாவும் அதையே கூறியிருந்தது. எவ்வாறாயினும் சீனாவின் அடுத்த கடல் கடந்த தளம் அமைக்கப்படக் கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்படும் இடங்களின் வரிசையில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகமும், இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகமும் முன்னிலையில் இருக்கின்றன.

இந்த இரண்டு துறைமுகங்களின் அபிவிருத்திக்காகவும் சீனா பெருமளவில் நிதியைக் கொட்டியிருக்கிறது. குவடார் துறைமுகத்தில் சீனா தளத்தை அமைத்தால் அதற்கு யாரும் நேரடியாக எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை.

ஆனால் அம்பாந்தோட்டை அப்படியல்ல. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறது. எனவே எதிர்காலத்தில் சீனா இங்கு தளத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பொதுவான கணிப்பு.

ஆனால் சீனாவும் இலங்கையும் அத்தகைய வாய்ப்புகள் இல்லை என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 16ம் திகதி பீஜிங்கில் நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர் Hua Chunying இடம் எதிர்காலத்தில் அம்பாந்தோட்டையில் சீனா தளத்தை அமைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலே இத்தகைய ஊகங்கள் குறித்து சீனா எந்தளவுக்கு அதிருப்தியும் எரிச்சலும் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தை சிலர் இராணுவ அல்லது மூலோபாய கண்ணோட்டத்துடன் ஊகங்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று நான் நினைக்கிறேன் என்று Hua Chunying சூடாகப் பதிலளித்திருந்தார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா தனது தளத்தை அமைக்கக் கூடும் என்று தொடர்ச்சியாக ஊடகங்களில் எழுப்பப்படும் சந்தேகங்கள் சீனாவைக் கடுமையாக எரிச்சலடையச் செய்திருக்கின்றன.

ஏனென்றால் இத்தகைய ஊகங்கள் தமது நோக்கத்தைக் குழப்பி விடுமோ என்ற கவலை சீனாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக அச்சத்தை ஏற்படுத்துவதில் இந்திய, அமெரிக்க, ஜப்பானிய ஊடகங்களே முன்னிலை வகிக்கின்றன.

அம்பாந்தோட்டையில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது தொடர்பாக இந்திய, மேற்குலக ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதி வரும் கருத்துக்கள், சீனாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதையே Hua Chunying அளித்திருந்த பதில் உறுதி செய்கிறது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் இந்தக் கருத்து வெளியாவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் தான் ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க் கப்பலான JMSDF Akebono அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருந்தது.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களைப் பாதுகாக்கும் பணிக்காக செல்லும் வழியில் இரண்டு நாட்கள் இந்த ஜப்பானிய போர்க் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த முதலாவது வெளிநாட்டுப் போர்க் கப்பல் இதுவாகும்.

ஜப்பானிய போர்க் கப்பல்கள், ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செல்லும் போதும் திரும்பும் போதும் எரிபொருள் நிரப்பவும் மாலுமிகளின் ஓய்வுக்காகவும் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது வழக்கம்.

ஆனால் இம்முறை ஜப்பானிய போர்க் கப்பல் அம்பாந்தோட்டையைத் தெரிவு செய்தமை ஆச்சரியமான விடயம். அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான ஊகங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஜப்பானிய கடற்படை இந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

அதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் தாம் இரகசியமாக எதையும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக சீனாவும் வேறு வழியின்றி ஜப்பானிய நாசகாரிக் கப்பல் அங்கு தரித்து நிற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்.

எனினும் ஜப்பானிய போர்க் கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்துச் சென்றதை சீனா ஒருபோதும் விரும்பி வரவேற்றிருக்காது.

ஏனென்றால் சீனாவுக்குப் போட்டியாக ஜப்பானும் இந்தியப் பெருங்கடலில் தனது ஆற்றலைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

சீனாவைப் போலவே இந்தியப் பெருங்கடல் வழியான கப்பல் பாதை ஜப்பானுக்கும் முக்கியமானது. மத்திய கிழக்கிறகு தனது கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும் என்று ஜப்பானும் விரும்புகிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படைப் பலம் அதிகரிப்பது தமது கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஜப்பானுக்கு இருக்கிறது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் குறித்து முக்கியமான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.

அந்தப் பேச்சுக்களின் முக்கியமான அம்சம் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்து கொளவதேயாகும். அதற்காக இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் ஜப்பான் தனது கடற்படை உறவுகளைப் பலப்படுத்தி வருகிறது.

இந்தியப் பெருங்கடலில் ஜப்பானின் முக்கியமான கூட்டாளியாக இந்தியா மாறியிருந்தாலும் இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனைப் பலப்படுத்துவதில் ஜப்பான் முக்கியமான பங்கை வகித்து வருகிறது.

ஏனைய நாடுகளின் இராணுவங்களுக்கு ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளை வழங்கும் திட்டத்தை ஜப்பானிய கடற்படை கடந்த மாதம் விரிவுபடுத்த திட்டமிட்டது.

2012ல் தொடங்கப்பட்ட இந்த ஆற்றலைக் கட்டியெழுப்பும் திட்டம் 14 தென்கிழக்காசிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டது.

தெற்காசியாவுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கையே முதன்முதலாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தனர்.

குறிப்பாக அனர்த்த நிவாரண மனிதாபிமான உதவிகள், வசதிகளை பேணல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தான் இந்த உதவியின் பிரதான அம்சமாகும்.

இது தொடர்பாக பேச்சுக்களை நடத்த ஜப்பானிய கடற்படையின் உயர்நிலை அதிகாரியும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியுமான அட்மிரல் Katsutoshi Kawano கடந்த மார்ச் 8ம், 9ம் திகதிகளில் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் திட்டத்தை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்றை எட்டியிருந்தார்.

அது இலங்கைக்கு ஆற்றலைக் கட்டியெழுப்பும் ஜப்பானிய உதவியிலும் கவனம் செலுத்தியிருந்தது. அதற்குப் பின்னர் தான் கடந்த 9ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஜப்பானிய கடற்படையின் நாசகாரி கப்பல் வந்திருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்ற ஜப்பானிய கடற்படையின் நாசகாரி கப்பலில் இலங்கைக் கடற்படையினருக்கு ஆற்றலைக் கட்டியெழுப்பும் ஜப்பானிய திட்டத்தின் கீழ் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

தெற்காசியாவில் இத்தகைய பயிற்சிகளை ஜப்பான வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்காக ஜப்பான் ரோந்துப் படகு ஒன்றையும் வழங்கியிருந்தது.

மேலும் சில ரோந்துக் கப்பல்களை வழங்கவும் இணங்கியிருக்கிறது. இப்போது ஆற்றலைக் கட்டியெழுப்பும் திட்டத்துக்குள்ளேயும் இலங்கையை உள்ளீர்த்திருக்கிறது ஜப்பான்.

இது இலங்கைக் கடற்படையைப் பொறுத்தவரையில் சாதகமான விடயம் தான். ஆனால் பிராந்திய பாதுகாப்பு என்று வரும் போது ஏற்கனவே இந்திய, சீன அதிகாரப்ஹ போட்டிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு இது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சீனாவின் கடன்பொறிமுறையில் இருந்து தப்பிக்க இந்தியாவும் ஜப்பானும் மாற்று ஒழுங்குகளைச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது கூறியிருந்தார்.

ஆனாலும் சீனாவின் கடற்பொறியில் இருந்து இலங்கை மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்க இன்னமும் இந்த நாடுகள் முழுமையாக முன்வரவில்லை.

ஆனாலும் சீனாவுடனான ஆதிக்கப் போட்டியை முன்னிறுத்தி இலங்கைக் கடற்படையின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதில் ஜப்பான் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இது சீனாவை எரிச்சலடையச் செய்திருக்கும். இந்தச் சூழலில் அம்பாந்தோட்டையில் சீனா தனது தளத்தை அமைக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் இலங்கையில் தனது பிடியைப் பலவீனப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை சீனாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவே இது பற்றிய செய்திகளின் மீது சீனா எரிச்சல் கொள்வதற்குக் காரணமாக இருக்கலாம்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி