உலகின் மிகப்பெரிய விமானத்தின் பிரதான விமானி மகிழ்ச்சி!!

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் குறித்து உலகின் மிகப்பெரிய விமானத்தின் பிரதான விமானி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

பாரிய விமானத்தை தரையிறக்குவதற்காக மத்தல சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரதான விமானி தெரிவித்துள்ளார்.

என்டநொவ் 225 என்ற பாரிய சரக்கு விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 17ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உரிய நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் விமானம் நேற்று அதிகாலை இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமானது.

இராட்சத விமானம் இலங்கையை விட்டு செல்வதற்கு முன்னர் விமான ஊழியர்களுக்காக விசேட நிகழ்வு ஒன்று மத்தல விமான நிலைய ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட விமானத்தின் பிரதான விமானி, “மத்தல விமான நிலையத்தில் உள்ள வசதிகள் தற்போது உலகின் எந்தவொரு விமானத்தையும் தரையிறக்குவதற்கு போதுமானதாக உள்ளது.

அங்குள்ள வசதி மற்றும் ஓடுதளத்தின் வசதி மிகவும் உதவியாக உள்ளது. எங்கள் விமான நிறுவனம் மத்தல விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து மிகவும் திருப்தியடைகின்றோம்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு எங்கள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் மத்தல விமான நிலையம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. சர்வதேச விமான சேவைகள் நடத்துவதற்கு பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்பட்டதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லையென்றும் பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையை தெற்காசியாவின் ஆச்சரியமாக மாற்றும் நடவடிக்கையில், இந்த விமான நிலையம் பெருந்தொகை செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி