ஆனந்த சுகாகரனின் பிள்ளைகளுக்கு கிடைத்த ஏமாற்றம்!!

அரசியல் கைதி ஆனந்த சுகாகரனின் பிள்ளைகளுக்கு வடமாகாண ஆளுநரால் 10 ஆயிரம் ரூபா உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நம்பிக்கை வழங்கி இருந்தார்.

அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் காத்திருந்த நிலையில் இதுவரையில் ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வின் இரவு விருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆளுநர் ரெஜினோல்ட்குரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறையில் அரசியல் கைதியாக வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆளுநரினால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

மாதாந்தோறும் இவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது.

அந்நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவமோகன் யாழ். இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உட்பட மாகாணசபை அமைச்சர்கள் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமது தந்தையின் விடுதலைக்காக காத்திருந்த இரு பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைத்தது ஏமாற்றம் மாத்திரமே.

மாதாந்தம் 10 ஆயிரம் உதவி பணத்தொகையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே வழங்க முடியும், எனினும் அவரது தந்தையினை விடுவிப்பதன் மூலம் அவர்களின் நிரந்தர கல்விக்கான உறுதியினையும், அவர்கள் சந்தோஷமாக தமது கல்வி நடவடிக்கையை தொடர முடியும் என்பதை கவனிக்க தவறிவிட்டனர் அரசியல் தலைமைகள் என்றே கூறமுடியும்.

இன்று தாயையும் இழந்து தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வாழும் குறித்த சிறுவர்களுக்கு நிரந்தரமான உதவி ஒன்றையே வழங்க வேண்டுமே தவிர இவ்வாறு தற்காலிக உதவிகளை செய்வது வருத்தத்திற்குரியது.

தாயின் இறுதி கிரியை நிறைவடைந்தவுடன், வீட்டில் தனது தந்தை ஆறுதல் கூற இருப்பார் என்ற ஏக்கத்துடன் வந்த ஆனந்தசுதாகரனின் மகனுக்கு அன்று கிடைத்த ஏமாற்றம் இன்று வரையிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

மலரும் புத்தாண்டுடன் எமது வாழ்வும் மலர்ந்து விடும், ஜனாதிபதி மாமா எமது கோரிக்கைகளைக் கண்கொண்டு பார்த்து எமது தந்தையை விடுவித்துவிடுவார், தந்தையுடன் சேர்ந்து புதுவருடத்தை கொண்டாடலாம் என இருந்த அந்த சிறுவர்களுக்கு மைத்திரி கொடுத்ததும் ஏமாற்றத்தையே.

இந்நிலையில், அவர்களின் எதிர்காலத்திற்கு உறுதிகொடுக்க வேண்டிய, அவர்களின் தந்தையை மீட்டுக்கொடுக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைவர்களும் இதை கண்டும் காணாமல் இருப்பது பொமக்களிடத்தில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி