மக்கள் நலன்களுக்கு எதிராக காணப்படும் அரசாங்கத்தின் தீர்மானங்கள்!!

அரசாங்கத்தின் தீர்மானங்களும், நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும், தொடர்ச்சியான விலையேற்றங்களும் அதனையே உறுதி செய்கின்றன.

எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அமுல்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல், கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும் என நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி (NFGG) தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக NFGG வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டள்ளது.

தொடர்நதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கான ஆணையினை மக்கள் வழங்கினார்கள்.

ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர் பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விலை அதிகரிப்புக்கள் என்பன இதனையும் உறுதிப்படுத்துகின்றன.

அமைச்சரவை மாற்றம் மக்களின் நலனை மையப்படுத்தியதாக இருக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது பதவிகளைப் பலப்படுத்தி தத்தமது கட்சிகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளனர்.

மக்களின் நலனை மையப்படுத்தியதாக அமைச்சரவை மாற்றம் இடம் பெறுமாக இருந்தால் அது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து ஆடம்பர வீண் செலவுகளைக் குறைப்பதாகவே அது அமைய வேண்டும்.

துரதிஸ்டவசமாக அது அவ்வாறு இடம் பெறவில்லை. பொது மக்களின் வரிப்பணத்தில் தமது விசுவாசிகளுக்கு ஆடம்பர சலுகைகளை அள்ளி வழங்கி சந்தோசப்படுத்தும் வகையிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த விஞ்ஞான பூர்வமான மற்றும் நிர்வாக வினைத்தறனை அதிகரிக்க்ககூடிய எந்த அணுகு முறைகளையும் அரசாங்கம் பின்பற்றவில்லை.

இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலையில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் மோசமாக்கும் வகையில் பல விலையேற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது.

சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் மற்றும் பால்மா என மக்களின் அடிப்படைத் தேவைகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விலையேற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது.

ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான மண்ணெண்ணையின் விலை நூறு வீதத்திற்குமதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது ஏழை மக்களின் அடிவயிற்றில் அடிப்பது போன்ற செயற்பாடாகும். இது போன்ற பொறுப்பற்ற கண் மூடித்தனமான விலையேற்றங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் மக்கள் மீதே அத்தனை சுமைகளையும் திணிக்கின்ற பொறுப்பற்ற போக்கே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடிகளுக்கான அடிப்படைக்காரணங்கள் என்னவென்பது அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். ஊழல், வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவுகள், துஸ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடான பொருளாதார நிர்வாகங்கள் என்பன காரணமாகவே நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்துச் செல்கிறது.

அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகும். நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தை எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆடம்பரச் செலவுகள் மீதான எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்பட வில்லை.

அவசியமற்ற சொகுசு சலுகைகள் குறைக்கப்படவில்லை. துஸ்பிரயோகங்களுக்கான பரிகாரங்கள் காணப்படவில்லை.

விவசாய அமைச்சுக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட அதி சொகுசு கட்டடத் தொகுதி பாவனையின்றியே இது வரை காலமும் கிடக்கிறது.

இது வரை காலமும் அதற்காக செலுத்தப்பட்ட வாடகை செலவீனம் 826 மில்லியன் என அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது.

இப்போது நியமிக்கப்பட்டுள்ள விவசாய அமைச்சர் தான் பழைய கட்டடத்திற்கே செல்லப்போவதாக அறிவித்துள்ளார். ஒரு அமைச்சின் கீழ் நடந்த துஸ்பிரயோகத்திற்கான ஒரு உதாரணமே இதுவாகும்.

இந்த அநியாயமான துஸ்பிரயோகங்களை நிறுத்துவதற்கோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தில் இருக்கும் எவராலும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையிலேயே மக்கள் மீது அத்தனை சுமைகளையும் அரசாங்கம் திணித்துள்ளது. பொறுப்பற்ற மக்களுக்கு விரோதமான இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முழு நாட்டையுமே அதிரவைத்த ஊழல் பெருச்சாளிகளை கைது செய்து கொள்ளளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மீட்காமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டு மக்களை தொடர்ந்தும் பொருளாதார சுமைக்குள் தள்ளும் இந்தப் போக்கினை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

தாம் பேசும் நல்லாட்சி என்பதில் குறைந்த பட்ச நேர்மையேனும் இருக்குமாக இருந்தால் எஞ்சியிருக்கும் தமது ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு வாக்களித்த விடயங்களை அமுல்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய முன்வர வேண்டும்.

இல்லாது போனால் கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்தித்தே ஆக வேண்டிய நிலை வரும்.

மக்களின் நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான உழைப்பை எமது கட்சி தொடர்ந்தும் இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் மேற்கொள்ளும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி