முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுகோள்!

"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்." இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியிக் ஊடக பேச்சாளர் துளசி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் தற்போது அதிக சூடு பிடித்துக் காணப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழினமுமே பங்கெடுத்திருந்தது என்பதுதான் உண்மை. அப்படியிருக்க விடுதலைப்

போராட்டத்தின் பெயரால் சில நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பது அநீதியும், இயற்கை நீதிக்குப் புறம்பான விடயமும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கான இளையோர்கள் மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சமூக விரோதக் குற்றச் செயல்களிலோ, வன்முறை நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் வன்முறை அற்ற அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

கூட்டரசைக் கொண்டு வந்ததிலும், அதைத் தொடர்ந்து நிலை நிறுத்தி வைத்திருக்கச் செய்வதிலும் தமிழர் தரப்பின் பங்களிப்பு மிக காத்திரமானதாக உள்ளது. இந்த நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் பொதுமன்னிப்பு வழங்குகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

நல்லாட்சியின் நாயகரான மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி தமிழர் தரப்புக்கு நன்றியையும், நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியுடன் ஒன்றித்துச் செயற்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்துக்கான நீதியை ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து வழங்குதல் வேண்டும்" - என்றுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி