வடக்கின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படாது!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலிருந்து வடமாகாணம் விடுபட முடியாது என்றும் யுத்தத்தினால் வடக்கில் வாழும் சாதாரண மக்களுக்கு கிடைக்காது போன பொருளாதார வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தை எதிர்வரும் ஐந்து முதல் பத்து வருடத்துக்குள் ஒன்றிணைந்த முழுமையான அபிவிருத்தியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தின் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே பிரதமர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற, இந்து சமயவிவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பிரதமர்,

உள்ளூர் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே வேலையில்லாப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு குறிப்பாக வேலையில்லா பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கும் சவால் ஏற்பட்டுவிடும் என்றார்.

யுத்தம் காரணமாக வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் தடைப்பட்டன.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதும் யுத்தத்தினால் இது தடைப்பட்டது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாதாரண மக்கள் பல பொருளாதார நன்மைகளை இழந்தனர். இவர்கள் இழந்த இந்தப் பொருளாதார நன்மைகளை மீண்டும் ஏற்படுத்தவே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமோ அல்லது வடமாகாணமோ விடுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

வடக்கில் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மிகவும் முக்கியமான விடயம் காணிகளின் விடுவிப்பு. இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருப்பதுடன், கொழும்பு திரும்பியதும் முடிவுகள் எடுக்கப்படும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் வீட்டுப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

65 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து தமது பதிவுகளை மேற்கொள்வார்கள்.

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் உண்மையான பொருளாதார அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம்.

அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்கும்போது போதிய வருமானம் இருக்கவில்லை. கடன்களை மீளச்செலுத்துவதற்கு வருமானம் போதுமானதாக இல்லை.

குறிப்பாக யுத்தத்தின் பின்னர் பெறப்பட்ட கடன்கள் மூன்று நான்கு மடங்காக அதிகரித்தன.யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு கூடியளவு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கைச் சேர்ந்த பல வர்த்தகர்கள் கொழும்பின் செட்டித்தெருவில் தமது வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரித்து அவர்கள் தற்பொழுது வர்த்தகங்களை வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளனர். அவ்வாறானவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

முதற்கட்டமாக வடக்கிற்கான 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முதலில் ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்த பிரதமர், மாவட்டங்கள் ரீதியாகப் பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கல் வீடுகள் அவசியம், எத்தனை பொருத்து வீடுகள் தேவை என்பதைக் கணக்கெடுத்து அதற்குத் தேவையான வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் அறிந்துகொண்டு ஒரு மாத காலத்துக்குள் மாவட்டங்களுக்கிடையில் வீடுகளைப் பிரிப்பது பற்றி தீர்மானிக்க முடியும்.

உட்கட்டுமான வசதிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதலில் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தினார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி