மன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள்!!

மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்காக அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வளாகத்தில் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட மண்ணில் எலும்புகள் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவை மனித எலும்புகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு குறித்த வீட்டின் உரிமையாளரால் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணினை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் இந்த விடயத்தினை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கட்டட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட “லங்கா சதொச” கட்டட பகுதிக்கு நேற்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று முதல் கட்ட அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று காலையும் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இன்று காலை 9.20 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு அந்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மீண்டும் அகழ்வுப்பணி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி