யாழ்.மாவட்டத்திற்கு 14 ஆயிரம் மலசல கூடங்கள் தேவை இருப்பதனால் தற்போது 1000 மலசல கூடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக யாழ்.மாவட்ட மேலதிக காணி உதவி அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.
இதன்போது, யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளரினால் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அங்கிகாரம் பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கூட்ட ஆரம்பத்தில் விளக்கமளிக்கப்பட்ட போது யாழ்.மாவட்டத்தில் நிலவும் மலசல கூட பிரச்சினைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் விசேட அடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி 49 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிற்கு மலசல கூடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில் மலசலகூடம் அமைத்தல் திட்டத்தில் நெடுந்தீவு 10, வேலணை 51 ஊர்காவற்துறை 55, காரைநகர் 30, யாழ்ப்பாணம் 80, நல்லூர் 40, சண்டிலிப்பாய் 100, சங்கானை 95, உடுவில் 50, தெல்லிப்பளை 100, கோப்பாய் 75, சாவகச்சேரி 75, கரவெட்டி 50, பருத்தித்துறை 50, மருதங்கேணி 30, உட்பட 891 மலசல கூடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்.மாவட்டத்திற்கு 14 ஆயிரம் மலசல கூடங்கள் தேவை. இன்னும் 13 ஆயிரம் மலசல கூடங்கள் தேவையாக உள்ளது. அவற்றிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டம் அமைக்கப்படும் போது தேவையின் விகிதாசாரத்தின் அடிப்படையில் மலசல கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வீட்டுத்திட்டத்துடன், மலசல கூடங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனால், தனியாக அமைக்கும் திட்டங்கள் வரும் போது, அந்த திட்டங்கள் வேறு பிரதேசங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
எனவே மலசல கூடம் அமைப்பதற்கு 55 ஆயிரம் ரூபா நிதி போதாது, மீள்குடியேற்ற அமைச்சினால் 1 லட்சம் ரூபாவாக ஒதுக்க கோரிக்கை விடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அந்தவகையில், மிகுதி 13 ஆயிரம் மலசல கூடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.