யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயர்தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் கடந்த 29ஆம் திகதி மாலை யாழ். சாவகச்சேரியிலுள்ள வீடொன்றுக்கு சைக்கிளில் விறகு கொண்டு சென்றுள்ளார்.
அவர் விறகினை கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப புறப்படும் போது இருள்சூழ தொடங்கி விட்டதால் அந்த வீட்டிலேயே மாணவன் தங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் மாணவன் யாழிலுள்ள குறித்த வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடந்த 30ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டதாக கூறுப்படும் மாணவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், பூநகரி மற்றும் யாழ். பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.