மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையே உச்சமடைந்துள்ள பனிப்போர்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான பனிப்போர் உச்சமடைந்துள்ளதன் வெளிபாடாகவே ரீ.என்.எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் தொலைக்காட்சி சேவையான ரீ.என்.எல் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு நிலையத்திற்கு நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

ரீ.என்.எல் தொலைக்காட்சியின் பொல்கஹாவெல ஒளிபரப்பு நிலையமே இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிவித்து பொல்கஹவெலவில் உள்ள ரீ.என்.எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ள நிலையில், குறித்த விடயம் நாடாளுமன்றில் நேற்று பேசும் விடயமாக மாறியிருந்தது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கருத்து தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்மைக் காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் ரீ.என்.எல் தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பி வந்த நிலையிலேயே, அதன் பொல்கஹவெல பரிமாற்ற மையம் மூடப்படுவதற்குக் காரணம்” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இந்த விடயம் தேசிய அரசாங்கத்தில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் வெளிக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்னர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி