தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் விக்னேஸ்வரனின் புதிய யுக்தி!!

கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார்.

மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார்.

தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அரசியல் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன்சுமை மற்றும் சர்வதேச அழுத்தங்களால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் பலவீனமடைந்து வருகிறது என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமக்கு ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள இடர்களை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் சுயாட்சி உரிமையை அவர்களாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்து 1970களில் தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மேடைகளில் பேசிய பேச்சுகளை ஒத்ததாகவே தெரிகிறது.

சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் பலவீனம் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமையை பெற்றுத் தரும் என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நம்பிக்கை எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதில் நிறையவே கேள்விகள் உள்ளன.

தற்போது சிங்கள அரசியல் தலைமைத்துவத்துக்குள் குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் அது பலவீனமான நிலையில் இருக்கிறது என்று கூற முடியாது.

எதிரியை சரியாக மதிப்பீடு செய்ய முடியாமல் குறைத்து மதிப்பிடுவதுதான் பலரது தோல்விக்கு காரணமாக அமைகிறது.

அந்தவகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களத் தலைமைத்துவத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகிறது.

ஆட்சியில் உள்ள சிங்களத் தலைமைத்துவம் என்பது வேறு. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் ஆட்சியை ஆட்டிப் படைக்கக் கூடிய தலைமைத்துவம் என்பது வேறு.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வேண்டுமானால் பலவீனமானதாக இருக்கலாம். அதற்குள் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. கடன் பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் சர்வதேச அழுத்தங்களையும் அது எதிர்கொள்கிறது.

ஆனால் ஆட்சியில் உள்ள இந்த தலைமைத்துவம் மாத்திரமே சிங்களத் தலைமைத்துவம் அல்ல. இதற்கு வெளியே இன்னமும் சிங்களத் தலைமைத்துவம் மூர்க்கத்தனமான சிந்தனைகளுடனும் கடும்போக்கு நிலைப்பாடுகளுடனும் இருக்கிறது. இயங்குகிறது.

மகிந்த ராஜபக்சவை தலைமையாகக் கொண்டு செயற்படும் அணியை யாராலும் ஒருபோதும் குறை மதிப்புக்கு உட்படுத்த முடியாது. உள்ளராட்சித் தேர்தலில் அந்த அணி பெற்றுக் கொண்ட வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள பலத்தையும் செல்வாக்கையும் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது.

அதைவிட முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்புகிறபடி சுயாட்சி உரிமைகளை அவர்களாகவே வழங்கக் கூடிய நிலை ஒன்று ஏற்பட்டால் கூட அதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் ஒருபோதும் இடமளிக்காது.

அத்தகைய தருணமொன்றில் இப்போதுள்ளவை விடவும் அந்தத் தலைமைத்துவம் அசுர பலத்தை வெளிப்படுத்தும். ஏனென்றால் அதற்குப் பின்னால் சிங்களப் பௌத்த பெரும் தேசியவாதம் இருக்கிறது.

அது தமிழ் மக்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்காது. இது காலங்காலமாக தமிழ் மக்கள் கற்று வந்துள்ள பாடம்.

தமிழர் தரப்பின் கை எப்போதெல்லாம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. தனது பலத்தைப் பெருக்கிக் கொள்கிறது. அதற்கு சிங்கள் பௌத்த பேரினவாத சிந்தனைகள் துணையாக அமைந்து விடுகின்றன.

சிங்கள அரசியல் தலைமைத்துவம் பலவீனமடைகின்ற சூழலில் தமது தேவைகளின் நிமித்தம் தமிழர்களுக்குச் சுயாட்சி உரிமைகளை அவர்களோ கையில் தூக்கிக் கொடுப்பார்கள் என நம்ப வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்க்கிறார்.

அவரது அந்த நம்பிக்கைப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால் கடந்த கால வரலாறு அத்தகைய படிப்பினையை கற்றுத் தரவில்லையே?

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று தமிழர்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டம் நடத்திய போதும் சிங்கள தலைமைத்துவம் அத்தகையதொரு முடிவுக்கு ஒருபோதும் வர முற்பட்டதில்லை.

முன்னைய ஆட்சிக் காலங்களில் எல்லாம் சிங்களத் தலைமைத்துவம் பலமாக இருந்தது என்று கூற முடியாது. எல்லாத் தலைவர்களும் அரசியல் நெருக்கடிகளையே எதிர்கொண்டார்கள். கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தார்கள். சர்வதேச அழுத்தங்களை சமாளித்துக் கொண்டார்கள்.

ஆனாலும் சிங்களத் தலைமைத்துவம் தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதில் தான் கவனம் செலுத்தியதே தவிர அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது பற்றிச் சிந்திக்கவேயில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டதை விட மிகப்பெரிய அழுத்தாங்களை இப்போது தமிழர் தரப்பினால் சிங்கள அரசியல் தலைமைக்கு கொடுக்கவா முடியும்?

விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட படியிறங்கி வராமல் பேரினவாதத்தை தூண்டிவிட்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சிங்களத் தலைமைத்துவம் அது தான் வரலாறு.

இப்படியான நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகப் போகிறது. அதனை எப்படிச் சாத்தியமாக்கப் போகிறார் என்பது முதலமைச்சருக்கே வெளிச்சம்.

தமிழர்களை ஒன்றுபடுத்தி அதனைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் முதலமைச்சர். ஆனால் நடைமுறையில் தமிழரின் தலைமைத்துவம் உடைந்து போய்க் கிடக்கிறது.

சிங்களத் தலைமைத்துவத்தின் பலவீனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள முதலமைச்சருக்கு தமிழரின் தலைமைத்துவத்தில் உள்ள பலவீனம் தெரியாமல் போயிருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியான அரசியல் கட்சியை அமைப்பது பற்றிய முடிவை அறிவிக்க பேரவையிடம் மூன்று வார அவகாசம் கோரியிருக்கிறார்.

தமிழர் தரப்பை ஒன்றுபடுத்துவதற்கான வாய்ப்புகள், தெரிவுகளுக்குப் பதிலாக அதனைப் பலவீனப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பு பிரிந்து நின்று மோதி தமிழ் தேசியத்துக்கு முரணான கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளும் பலமடைவதற்கு வழிகோலின.

மீண்டும் மாகாண சபைத் தேர்தலிலும் அதே கூத்தை அரங்கேற்றும் முனைப்புகள் காண்பிக்கப்படுகின்றன.

இப்படியான நிலையில் சிங்களத் தலைமை பலவீனமடைகிறது என்றும், சுயாட்சியைக் கையில் கொடுக்கப் போகிறது என்றும் வெற்று நம்பிக்கைக்குள் தமிழர்களைத் தள்ளுவதற்கு முதலமைச்சர் முற்படுகிறார்.

அடுத்து வரும் தேர்தல்கள் சிக்கலானவை அதில் இனவாதம் கொப்பளிக்கும் சாத்தியங்கள் அதிகம். போர் முடிந்த காலகட்டத்தில் இனவாதம் எந்தளவுக்கு கூர்மை பெற்றிருந்ததோ அதே நிலை உருவாகுவதற்கான சூழல்களே தென்படுகின்றன. வடக்கிலும் கூட அத்தகையதொரு நிலையை எதிர்பார்க்கலாம்.

அவ்வாறானதொரு இனவாத எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத் தலைமைத்துவம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளும். ஆனால் தமிழர் தரப்பு அத்தகையதொரு ஒருமைப்பாட்டுக்குள் வரத் தயாராக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் தமிழர் தரப்பு எப்போதுமே தமக்குள் சண்டையிட்டு முரண்பட்டுக் கொண்டு பலவீனப்பட்டுப் போன வரலாற்றைக் கொண்டது.

அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு எப்போதும் தமிழர் தரப்பை ஒன்றுபட விடாமல் பிரித்தாளுகின்ற உத்தியைக் கையாளுவது சிங்கள அரசியல் தலைமை மாத்திரமன்றி இலங்கை விவகாரத்துடன் தொடர்புடைய நாடுகளின் உத்தியாகவும் இருந்து வந்திருக்கிறது.

இப்படியான நிலையில் சிங்களத் தலைமைத்துவம் பலவீனமடைகிறது என்று காத்துக் கொண்டிருப்பது குளம் வற்றும் வரை காத்திருக்கும் கொக்கின் நிலைக்கு ஒப்பானது. குளம் வற்றும் போது குடல் வற்றிச் சாகும் கொக்குப் போல தமிழர் நிலை ஆகிவிடக் கூடாது.

சிங்களத் தலைமைத்துவத்தின் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதை விட தமிழரின் பலத்தை உறுதிப்படுத்துவதில் தான் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தமிழர் தரப்பை ஒன்றுபடுத்தி பலப்படுத்துவதே முதன்மையானது. முக்கியமானது. தமிழரின் பலத்தை ஒன்றுபடுத்துவதற்கு தவறினால் சிங்களத் தலைமைத்துவம் ஒருபோதும் தனது நிலையில் இருந்து இறங்கி வராது.

அதேவேளை எந்த நெருக்கடி வந்தாலும் தமிழருக்கான உரிமைகளை சிங்களத் தலைமைத்துவம் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடாது. ஆனாலும் அத்தகைய நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஊட்டுவதற்கு முதலமைச்சர் முற்படுகிறார்.

அதனை தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அவரது பங்காளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரசாங்கம் ஒருபோதும் தீர்வைத் தராது என்று நம்புகிறவர்கள்.

முதலமைச்சர் குறிப்பிட்டது போன்று மொஹமட் அலியின் யுக்தி எந்தளவுக்கு தமிழரின் அரசியலுக்கு ஒத்துப் போகும் என்று தெரியவில்லை.

எதிரியைக் களைப்படைய வைப்பதில் முன்னர் தமிழர் தரப்பு வெற்றி பெற்றிருந்தாலும் இப்போது அப்படியில்லை. அதுபோலவே தமிழர் தரப்பு தனது முகத்தில் அடிவிழாமல் தற்காத்துக் கொள்ளும் திறனுடனும் இப்போது இல்லை.

அவ்வப்போது முகத்தில் குத்துகளை வாங்கிக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பு மொஹமட் அலியைப்போல எப்படி எதிரியைக் களைப்படைய செய்ய முடியும்? எப்படி வெற்றியைப் பெற முடியும்?Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி