தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் உடன்பாடொன்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதும் வடக்கில் வேறு எந்தவொரு தமிழ்த் தலைவர்களையும் வளர விடாது தடுப்பதுமே அந்த உடன்பாடாகும் என மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த உடன்பாட்டின் அடிப்படையில் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக முன்மொழிவதற்கு ஆயத்தமான போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் இக்காரணத்தை அடிப்படையாக கொண்டே.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதி சபாநாயகர் பதவியையும் பகிர்ந்து கொள்வதாக ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும் பிரதி சபாநாயகர் பதவியையும் ஐ.தே.க. தற்போது பெற்றுள்ளது.
எனவே அக்கட்சி பிரதான உடன்பாட்டினை மீறியுள்ளமையினால் சு.க. உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்
மேலும் அரசாங்கத்தில் தற்போதைக்கு அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அடுத்து வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே அவர்களை நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எனக் கருதப் போவதில்லை.
பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய 118 பேர்கள் அடங்கிய பட்டியல் பற்றிப் பேசுகின்றனர். அவ்வாறான பட்டியல் எங்குள்ளது?,
நல்லாட்சி அரசாங்கம் ஈட்டிய பெரும் வெற்றியாக தகவலறியும் சட்டம் பற்றி பேசினர். எனினும் அது சட்டமாக உள்ளதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்றார்.