பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம்- விஜயதாச ராஜபக்ஷ

உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருவர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சைகளில் சித்தியடைய செய்வதற்காக சில பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

குறித்த விடயத்திற்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவீனமானதும், அடிப்படையற்றதுமான கருத்து தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்குமே இழுக்காகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறைந்த பெருந் தலைவரும், சிந்தனைச் சிற்பியுமான அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவானதாகும்.

உண்மையில் அது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்தாலும் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.

அதேபோல அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் அங்கு கற்பிக்கிறார்கள். ஆகவே, இனவெறுப்பு வாதியான விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே உள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு அந்தஸ்தில் உள்ள இந்த அரசியல்வாதி பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் இழிவாக சிந்திப்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமானதல்ல. மேலும், நல்லாட்சி அரசினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருத்தர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும்.

எனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் குறித்த அமைச்சரின் கூற்றுக்கு இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும், கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி