முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடந்தோறும் முன்னெடுக்க செயற்றிட்டம்!

யார் இருந்தாலும், இல்லா விடினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் நடாத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் இன்றைய தினம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தி இருந்தோம்.

அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம்.

இனி வருங்காலங்களில் சிலவேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரியகாலத்தில் நடத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டி வரினும் கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்துபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒருகுழுவை உருவாக்க எண்ணியுள்ளோம்.

மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம். இக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்துகொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேன்.

அனுப்ப வேண்டிய முகவரி - கௌரவ முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர், முதலமைச்சர் அலுவலகம், வடமாகாணம், கைதடி”


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி