பிள்ளையான் கைதாகி 1000 நாட்கள் நிறைவு!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடையவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர். கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது.


அவரது கொலை தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அன்று முதல் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விளக்கமறியில் நீதிமன்றத்தினால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் 1000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.இந்தப் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவராக பிள்ளையான் நியமனம் பெற்றிருந்தார்.

கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான அணியினரால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து கருணா ஒரு சாராருடன் விலகி அப்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்ததோடு அக்கட்சியின் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி