விசா நடைமுறையில் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாகலாம்!!


அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் இறுக்கமாக்கலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

அவுஸ்திரேலியாவிற்குள் வரமுன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதுடன், ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முதல், அவர் அவுஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும் வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி அவுஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன. ஆனால் மீதி விசாக்கள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் வரமுதலே நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், விசா நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வருடமொன்றுக்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு 162,000 பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி