வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவதற்கு அரசு நடவடிக்கை!!

"வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தில் படைக்குறைப்புச் செய்து 33 படையணிகளைக் கலைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ முகாம்களை மூடுவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது படுபயங்கரமானதாகும்'' என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன நேற்று சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளையின் 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

"படைப் பிரிவுகளுக்கான இராணுவத் தளபதியின் உத்தரவு கடிதத்தின் பிரகாரம், 112 ஆக இருந்த நிரந்தர படையணி 98 ஆகவும், தொண்டர் படையணி 80 இலிருந்து 61 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அப்படைப் பிரிவுகளிலிருந்து இராணுவத்தின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 793இலிருந்து 4 ஆயிரத்து 855 ஆக குறைவடையவுள்ளது.

கலையப்படவுள்ள படையணிகளில் ஒரு படையணியில் சுமார் 650 பேர் வரையானோர் இடம்பெற்றிருந்தனர். எனவே, 100 முதல் 150 வரையான முகாம்களையும் மூடிவிட வேண்டிய நிலையேற்படும்.

நந்திக்கடல், மெனிக்பாம், துணுக்காய், யாழ்ப்பாணம், நெல்லியடி, இரணைமடு, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, வவுனியா, தலைமன்னார் என வடக்கில் பல பகுதிகளிலும் குறிப்பாக, மர்ம ஸ்தானங்களிலுள்ள முகாம்களே இவ்வாறு அகற்றப்படவுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான ஜயந்த சமரவீரவும் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், இதை மறுத்து பாதுகாப்பைப் பலிக்கடாவாக்கும் வகையில் இராணுவப் பேச்சாளர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். இதற்கு உரிய வகையில் ஜயந்த சமரவீர எம்.பியால் பதிலடியும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று விசேட அறிக்கையொன்றை விடுத்த இராணுவத்தளபதி எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது என அறிவித்திருந்தார். உத்தரவைப் பிறப்பித்து விட்டு இல்லை எனக் கூறுவது கவலைக்குரிய விடயமாகும்.

பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றி வருகின்றது. 2019 டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற வேண்டும் என்பதால், புலம்பெயர் குழுக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசு அரும்பாடுபட்டு வருகின்றது.

படையணிகள் இவ்வாறு கலைக்கப்படுமானால் போர்க்காலத்தில் வகிபாகத்தை வகித்த இராணுவத்தினருக்குப் பதவி உயர்வைப் பெற முடியாமல் போகும்.

பதவி உயர்வு என்ற கனவு நனவாகாமலேயே ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, படையினரைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

படையினர் இவ்வாறு பழிவாங்கப்படும் நிலையில், போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, முதலாவது தற்கொலைத் தாக்குதலை நடத்தி கரும்புலிக்கு அரச அனுசரணையில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. படையினர் வசமிருந்த 84 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இன்று ஆவாக் குழு கழுத்தறுப்பு செய்கின்றது. ஒட்டுசுட்டானில் கிளைமோர் மீட்கப்படுகின்றது. மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று விஜயகலா எம்.பி. அறைகூவல் விடுக்கின்றார்.

நிலைமை இப்படியிருக்கையில் தான் வடக்கில் அத்தியாவசியமான முகாம்களை அகற்றுவதற்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பயங்கரமான தீர்மானம் தொடர்பில் அரசு மௌனம் காக்கக்கூடாது.

மேற்படி பயங்கர தீர்மானத்தை கட்டளையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கின்றேன்'' என்று பாதுகாப்பு அமைச்சரிடம் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பினார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி