வவுனியாவில் வறட்சி காரணமாக 9,516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் இன்று கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலர் மேட்டு நில பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலையுடன், பயிர்செய்கை மேற்கொண்ட சிலரின் பயிர்களும் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 4,437 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவு வடக்கில் 1, 351 பேரும், தெற்கில் 1,323 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2,405 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களுக்கான வறட்சி நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.