சிவனொளிபாத மலையிலும் பௌத்த மதத்தின் ஆதிக்கம்!!

சிவனொளிபாத மலையின் பெயரை மாற்றியமைத்து, வரலாற்றை திரிவுபடுத்த இனவாதக்குழுவொன்று முயற்சித்து வருவதால் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு – உரிய கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் 'சிவனடிபாதம்' எனப் பெயர்பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டு, 'கௌதம புத்தபகவானின் ஸ்ரீ பாதஸ்தானம்' எனப் பெயர் குறிக்கப்பட்ட கல்வெட்டு புதிதாக வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இப்பிரச்சினையானது இன ஐக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மதம் என்பது உணர்வுப்பூர்வமான விடயமாகும். அதைத் தூண்டும் வகையிலும், சீண்டிப்பார்க்கும் நோக்கிலும் எவரும் செயற்படக்கூடாது.

அன்பு, கருணை, ஒழுக்கம், அறவழி ஆகியவற்றையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஏனைய மதங்களை அழித்து தம் மதத்தைப் பாதுகாக்குமாறும், வளர்க்குமாறும் எந்தவொரு மதமும் நிபந்தனை விதிக்கவில்லை.

நிலைமை இப்படியிருக்கையில் ஹட்டன் பகுதியிலுள்ள இனவாதக் குழுவொன்று அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மதவாதத் தீயை மூட்டி, இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்க முயற்படுகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே சிவனொளிபாத மலையின் பெயரை மாற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

ஒரு வீதியின் பெயரை மாற்றுவதாக இருந்தாலே ஆயிரம் நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும். அவ்வளவு இலகுவில் அனுமதி கிடைத்துவிடாது.

ஆனால், புதிய பெயர்க்கல்லை வைப்பதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் பலம் பொருந்திய கரங்கள் உள்ளனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.

காவியுடை அணிந்த சிலரும் இதன் பின்னணியில் இருக்கின்றனர் எனவும், காக்கிச்சட்டை அணிந்தவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, இப்பிரச்சினையை சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது.

நாட்டில் எப்பகுதிக்குச் சென்றாலும் ஜனாதிபதியும், பிரதமரும் நல்லிணக்கம் பற்றியே பேசுகின்றனர். அதைக் குழப்பியடிப்பதற்கான முயற்சியாகக்கூட இது இருக்கலாம்.

ஆகவே, இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாகத் தலையிட்டு சிவனடிபாதம் என இருந்தது போலவே மீண்டும் பெயர் அமையக் கட்டளை பிறப்பிக்கவேண்டும்.

அவ்வாறு இல்லையேல் இப்பிரச்சினையானது பாரிய அழிவுக்கு வழிவகுக்கக்கூடும். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்துக்களின் பூர்வீக அடையாளங்களும், புனிதபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

தொன்மைவாய்ந்த ஆலயங்களில்கூட புத்தர் சிலைகள் முளைக்கின்றன. இது பௌத்த மேலாதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறு செய்யுமாறு புத்தபெருமான் எங்குமே கூறவில்லை. அவர் இன்று இருந்திருந்தால், சில பௌத்த அமைப்புகளின் செயற்பாடுகளைக் கண்டு இரத்தக் கண்ணீரே வடித்திருப்பார்.

ஒரு இனத்தையோ, மதத்தையோ அழிக்க வேண்டுமென்றால் இவ்விரண்டுக்கும் எதிராகப் போர்தொடுக்க வேண்டியதில்லை. இனத்தினதும், மதத்தினதும் கலை, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை அழித்தாலே போதும்.

இதேவேளை, அவை தானாகவே அழிந்துவிடும். எனவே, இப்பிரச்சினையை சிறுதுளியெனக் கருதி கண்டுகொள்ளாமல்விட்டால் அது நாளை பாரிய சுனாமியாகக்கூட உருமாறக்கூடும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி