யாழ். நல்லூரில், சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலிபனின் 31ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனுஸ்டிப்பு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அனுஸ்டிப்பு நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்பின் அகவணக்கமும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிகழ்வில் அரசியல் தொடர்பான விடயங்களை கதைக்க முடியாது என ஏற்பாட்டு குழுவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதும் வட மாகாணசபை அவைத்தலைவரை நிகழ்விற்கு அழைத்து வந்த ஜனநாயகப் போராளிகள், இது தொடர்பில் நீங்கள் கூற முடியாது என ஏற்பாட்டு குழுவினரிடம் வாதாடியுள்ளனர்.
அத்துடன் அவருக்கு கதைக்க முழு உரிமையும் உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், குறித்த இடத்தில் சீ.வி.கே.சிவஞானத்திற்காக இந்த குழப்பம் ஜனநாயக போராளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.