31ஆவது நினைவேந்தலில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ள சம்பவம்!!

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவருடைய 31ஆவது நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதை முன்னிட்டு யாழ்.நல்லூரில் இவர் உயிரிழந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இரு இளைஞர்கள் தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்கு காவடி எடுத்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.இதை பார்த்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வடிந்ததுடன், மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக இது அமைந்துள்ளது.

மேலும் இவர் உயிரிழந்த நேரமான காலை 10.45 மணிக்கு உயிர் நீத்த இடத்தில் ஒன்று கூடிய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.அத்துடன், பலரும் அவருடைய நினைவுத்தூபிக்கு மலர்மாலை தூவி தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

சுமார் 31 வருடங்களுக்க முன்பு இன்றைய நாள் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணீர் கடலில் தத்தளித்தது.

அதே போன்றதொரு நாளான இன்று தியாக தீபத்திற்காக ஒன்று திரண்ட மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திலீபன்..

1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.

அவரது ஐந்து கோரிக்கைகளாவன

  • பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
  • புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  • வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
  • இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, பொலிஸ்நிலையங்கள் மூடப்படவேண்டும்.


ஆகிய கோரிக்கைகளை 13.08.1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.

அதில் அமர்ந்தவர் 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்கு பிரிந்தது.

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.

இவர் யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி