37 பாகை செல்சியஸ் வெப்ப நிலையை கடந்துள்ள இலங்கை!!

இலங்கையின் பல பகுதிகளில் மிகவும் மோசமாக வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் 37 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கின் பல பிரதேசங்களில் வெப்ப நிலை 35 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிக கூடிய வெப்ப நிலை பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று 37.2 பாகை செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் 37.1 பாகை செல்சியஸ், அனுராதபுரத்தில் 36.1 பாகை செல்சியஸ், மொனராகலையில், 36 பாகை செல்சியஸ் மற்றும் கொழும்பில் 31.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அதிக வெப்ப நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதனால் அதிகமாக நீர் அருந்த வேண்டியது அவசியமாகும். விசேடமாக ஒருநாளைக்கு 6 லீற்றர் நீரேனும் அருந்த வேண்டும்.

இந்த நாட்களில் சிறு பிள்ளைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம். நோய் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளது. அடிக்கடி தண்ணீரில் உடலை நனைத்து வெப்பத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இளநீர், தோடம்பழம் உள்ளிட்ட பானத்தை இந்த நாட்களில் அருந்துவது நன்மையாகும். அவசர வேலை காரணமாக வெளியே செல்வதென்றால் குடை கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் தற்போதை காலநிலை காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.

மதிய வேளையில் வெளியில் செல்வோர் உடலுக்கு பொருத்தமான கிறீம்களை பூசிக்கொள்ளவும். வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்பட்டால் நோய்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி