நீதிமன்றங்களிற்கு முப்படையினரின் உள்ளக தகவல்களை வழங்க வேண்டாம்!!

நீதிமன்றங்களில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும், கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு தேவைப்படும் முப்படையினரின் உள்ளக தகவல்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவி விஜேகுணவர்தன, முப்படை தளபதிகள், அரச புலனாய்வு சேவைகளின் பிரதானிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள், பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதானி, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதானி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரதானி உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னேலிகொட காணாமல் போனமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகியோர் தாக்கப்பட்டமை மற்றும் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸாருக்கு, விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தின் உள்ளக தகவல்கள் தேவைப்படுகிறது.

இது குறித்து நீதிமன்றங்களுக்கு தெரியப்படுத்திய பின்னர், நீதிமன்றங்கள் விபரங்களை வழங்குமாறு படை தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களை கூறி, தகவல்களை படைத் தளபதிகள் வழங்கவில்லை.

இந்த தகவல்களை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ தளபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்திய ரத்னவிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், பொலிஸ் மா அதிபரிடம் பேசியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் சந்தேகநபர்களாக இருப்பது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் சாட்சியங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரிடம் வாக்குமூலங்கள் கூட பெறப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் மா அதிபர்,

நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமையவே இராணுவத்தினரிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சிலரிடம் பல முறை வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் எவரும் வெறுமனே கைது செய்யப்படவில்லை எனவும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று திருப்தியடைய கூடிய தகவல்கள் கிடைத்துள்ளமை காரணமாகவே படையினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

எனினும் இறுதியில், படைகளின் உள்ளக தகவல்கள் எதனையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி, முப்படை தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்படும் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி