ரெஜினா படுகொலை வழக்கில் இரண்டு சிறுவர்களிடம் வாக்குமூலம்!

யாழ். சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று இரண்டு சிறுவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்து வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்போது, 10 வயதான கணேஸ்வரன் சர்மிளா மற்றும் 7 வயதான கணேஸ்வரன் கவின் ஆகியோரிடமே இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடம்பெற்ற நாள் அன்று தாம் கிணற்றடியில் இருந்ததாக இரண்டாவது சாட்சியாளர் ஏற்கனவே சாட்சியமளித்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி ரெஜினாவின் பாதணிகள் தமது வீட்டில் இருந்ததாக இரண்டாவது சாட்சியாளரின் பிள்ளைகள் அறிவித்தமைக்கு அமைய, நேற்று அவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்கக்கூடிய அனைவரையும் அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் சிவனேஸ்வரன் ரெஜினா என்ற ஆறு வயது சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி