நல்லாட்சி என்று கூறி அழிக்கப்பட்டு வரும் தமிழர்களின் அடையாளங்கள்!!

தமிழரின் பூர்வீக அடையாளங்கள் நல்லாட்சி அரசில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் ஆலயம் அமைத்து வழிபட முடியாது என்பதுடன், மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பாலேயே ஆலயம் அமைக்க முடியும் என தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.

இந்த மலைப் பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் வரலாற்றுடன் தொடர்புடைய நாகர்களின் புராதன பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன.

பல தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை, வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொது மக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதை தமிழ் மக்கள் வண்மையாக கண்டித்துள்ளனர்.

தமிழர்களின் ஒவ்வொரு பகுதிகளும் திட்டமிட்ட வகையில் நல்லாட்சியிலும் இன அழிப்பு செய்யப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி