விக்கியை முதல்வராக நீடிக்கவிட்டது தான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு!!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தபால்காரர் என்றும், அவரை முதல்வராக நீடிக்கவிட்டது தான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எங்கள் கட்சியின் பெயரே சமஷ்டிக் கட்சி. அண்ணண் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் வாதாடியவன் நான். அந்த வழக்கில் எங்களுக்கு ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ‘சமஷ்டியை இவர்கள் கோர முடியும்’ என்று தான் வந்திருக்கின்றது.

இந்தத் தீர்ப்பு வந்த கையோடு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த தீர்ப்பின் பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு கண்டியில் உள்ள மகாநாயக்க தேரர்களை ஓடிப் போய்ச் சந்தித்தார்.

தீர்ப்பை அவர்களிடம் கொடுத்தார். அது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். அதனை கொடுத்து இது அருமையான தீர்ப்பு என்றும், இதனை உங்கள் உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

நாங்கள் சமஷ்டியை கோர முடியுமென்று கூறி தீர்ப்பை தேரர்களிடம் கொண்டு சென்று கொடுத்தவர் தான் முதலமைச்சர். ஆனால், அந்த தீர்ப்பைக் கொண்டுபோய் கொடுப்பதற்கு ஒரு தபால்காரர் போதும்.

இருப்பினும் நீதிமன்றத்தில் வாதாடுவதை ஒரு தபால்காரர் செய்ய முடியாது. நான் செய்தது நீதிமன்றில் வாதாடி அந்தத் தீர்ப்பைப் பெற்றது. ஒரு தபால்காரர் செய்கின்ற வேலையை நான் செய்யவில்லை.

நான் வாதாடி பெற்ற தீர்ப்பை நல்ல தீர்ப்பென்று ஓடிப்போய் அங்கு கொடுத்தவர் இன்றைக்கு எனக்கு சமஷ்டியை பற்றி போதிப்பதற்குத் தலைப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றுள்ள துரதிஷ்டவசமான நிலைப்பாடு.

கூட்டமைப்பின் தலைமை தவறிழைத்திருக்கிறதென்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். என்னைப் பொறுத்தவரை அவரை முதலமைச்சராக நீடிக்கவிட்டது தான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி