சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு ஒத்தி வைப்பு!!

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளைக்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரண்டு நீதியரசர்களே அமர்வில் இருந்தமையினால் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதுடன் அடுத்த மாதம் 19ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை காரணமாகக் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தவில்லை.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு அமைச்சரவைப் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு மீதான நீதிமன்றின் இடைக்காலக் கட்டளை ஜூன் மாதம் 29ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.

வடக்கு மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்வதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த கட்டளைக்கு எதிராக சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றம் இதுவரை தீர்மானிக்கவில்லை.

டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மூல வழக்கை விசாரித்த நீதியரசர்களில் ஒருவர், முதலமைச்சரின் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் குழாமில் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

டெனீஸ்வரன் தரப்புச் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் அதற்கு ஆட்சேபனை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால கட்டளையை நடைமுறைப்படுத்தவில்லை என்று டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த மாதம் 16ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அன்றைய தினமே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் தாக்கல் செய்த மூல வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி