தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இதனை கூறினார்.
இதேவேளை, தன்னூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை எம்.ஏ. சுமந்திரன் பழி வாங்குவதாக கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என வடமாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு தற்போது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.