விஜயகலாவுக்கு எதிராக தாக்கல் செய்யவுள்ள குற்றப் பத்திரிகை!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது வெளியிட்ட கருத்து சம்பந்தமான சட்டமா அதிபர் திணைக்களம் விஜயகலாவுக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின் 157(அ) சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 157(அ) சரத்தின் கீழ் இலங்கையில் தொடரப்படும் முதலாவது வழக்கு இதுவாகும் என சட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 20 வது சரத்தின் கீழும் அவருக்கு எதிராக வழக்கு தொடருமாறு சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 157 ( அ) சரத்து 12 பந்திகளை கொண்டுள்ளது. அதில் 6 வது பந்தியில் கீழ் விஜயகலாவுக்கு எதிரான வழக்கு தொடரப்பட உள்ளமை முக்கிய அம்சமாகும்.

157(அ) சரத்தின் 01ஆவது பிரிவில், “இலங்கையிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்துக்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதி வழங்கவோ, பிரசாரம் செய்யவோ, அல்லது அந்த செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் மேற்படி சரத்தினை ஒருவர் மீறுவாறாயின் அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் தொடர்பாகவும் 157(அ) சரத்தின் 03ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

அ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமை முடக்குதல்.

ஆ) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து, அவருடைய ஏனைய அசையும், அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

இ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமல் ஆக்குதல்.

ஈ) அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ (அரசியலமைப்பின்165ஆம் சரத்தில் குறிப்பிட்டபடி) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல் வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்ற கருத்தை விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி