வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!!

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்வைத்துள்ள யோசனையில் எழுந்துள்ள புதிய சிக்கல் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெரும்பாலும் பதிலளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளையைச் செயற்படுத்தவில்லை எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, அமைச்சரவைச் சிக்கலைத் தீர்த்து, வழக்கை மீளப் பெறச் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண முதலமைச்சரையும், ஆளுநரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

வடக்கு அமைச்சரவையிலுள்ளவர்கள் அனைவரும் பதவி விலகுவதாகத் தெரிவித்து ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்புவது என்றும், பின்னர் புதிய அமைச்சரவையை முதலமைச்சர் அறிவிப்பதன் ஊடாக அமைச்சரவை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவைத் தலைவர் யோசனை முன்வைத்திருந்தார்.

ஆனால், வழக்குத் தாக்கல் செய்த பா.டெனீஸ்வரன், நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையின் அடிப்படையில் பதவியேற்ற பின்னரே அவரை நீக்க முடியும்.

அதற்கு மாறாக சகல அமைச்சர்களும் பதவி விலகுவதாகக் கொடுக்கும் கடிதத்தின் ஊடாக செயற்படுத்த முடியாது. அவைத் தலைவர் முன்வைத்த யோசனையில் புதிதாக எழுந்த சிக்கல் இதுவாகும்.

இந்த விடயம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று எடுத்துக் கூறப்பட்டது. இது தொடர்பில் தனது சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து முடிவை பெரும்பாலும் கூறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி