மகிந்த ஆட்சி மகிந்த ஆட்சி நாட்டின் அபிவிருத்தி எனும் பெயரில் வெளிநாட்டு கடன்களைதான் பெற்றது!!

சட்ட ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை முற்றாக தோல்வியடைந்த காரணத்தினால், எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்று தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

மாகாணசபை தேர்தலை நடத்த எல்லை நிர்ணய அறிக்கை ஒன்றை மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

எனினும் எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்று அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் அவருக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. அவர் பெருமளவில் வெளிநாட்டு கடன்களை பெற்றார்.

இந்த கடனை செலுத்துவது சிரமமானது என புரிந்து கொண்ட அவர் பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், தேர்தலை நடத்தி மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள முயற்சித்தார். எனினும் மக்கள் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட பழக்கிக் கொண்ட கட்சிகள் அல்ல. இரு கட்சிகளும் நீண்டகாலமாக எதிரெதிர் அணிகளாக செயற்பட்ட கட்சிகள். எனினும் தற்போது ஒரு அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்களை நடத்தி நாட்டை ஆட்சி செய்கின்றன.

ஆனால், இதனை சிலர் தவறாக பார்க்கின்றனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் அவர் கருத்து வெளியிடப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எவரும் கருத்து வெளியிட்டதில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை மிகவும் ஜனநாயக முறையில் செயற்பட்டு வருகிறது எனவும் ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி