வடக்கு மாகாணசபையின் மீதான நம்பிக்கையை கைவிட்ட தமிழ் மக்கள்!!

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முடியப் போகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடந்த வாரம் கூறியிருந்தார்.

2013 செப்டெம்பர் 21ஆம் திகதியே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், 2013 ஒக்டோபர் 25ஆம் திகதியே மாகாண சபையின் முதலாவது அமர்வு நடத்தப்பட்டது.

தேர்தல் நடத்தப்பட்ட நாளை அடிப்படையாக வைத்து மாகாண சபையின் பதவிக்காலம் கணிக்கப்படுவதில்லை. முதலாவது சபை கூட்டப்பட்ட நாளில் இருந்தே, ஐந்து ஆண்டுகள் அதன் பதவிக்காலமாக கருதப்படும்.

அந்த வகையில் தான், எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் முதலாவது மாகாண சபை தானாகவே கலைந்து போய் விடும். இந்த மாகாண சபை இன்னமும், சுமார் 51 நாட்கள் வரை தான் உயிர்வாழப் போகிறது.

பெரும் நெருக்கடிகள், சர்ச்சைகள், குழப்பங்கள், போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட போது மக்கள் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்பு, இப்போது இல்லாமலேயே போய் விட்டது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய போது, நாளிதழ் ஒன்று “மலர்ந்தது தமிழ் அரசு“ என்று பிரதான தலைப்பிடப்பட்டிருந்தது. அந்தளவுக்கு மிகப் பெரியதொரு எதிர்பார்ப்பு மாகாணசபையிடம் காணப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய வகையிலோ, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வகையிலோ மாகாண சபை செயற்பட்டிருக்கிறதா என்பதே இன்றுள்ள மிகப் பெரிய கேள்வி.

வடக்கு மாகாணசபை எதையும் சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழும் போதெல்லாம், அதனை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சரி, அவரது அமைச்சர்களும் சரி, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் சரி வன்மையாக மறுத்து வந்திருக்கிறார்கள்.

அவர்களின் மறுப்பு, அவர்களது உழைப்பின் அளவுகோலின் அடிப்படையில் எந்தளவுக்குச் சரியானதாக இருக்கலாம். அதுபோல தான், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அளவுகோலின் அடிப்படையில், வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் குறித்த விமர்சனங்களையும் மறுத்து விட முடியாது.

ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை விட, இன்னமும் சாதிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதனை வடக்கு மாகாண சபை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

அதாவது 400 க்கும் அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களமாக இருந்த வடக்கு மாகாண சபை, தமது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு ஏற்ற நிலையியல் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியிருக்கிறது.

இதனால் தான், வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றும் ஒரு பயனற்ற சபையாகத் தான் இது இருந்தது, என்ற குற்றச்சாட்டுகள் அதிகளவில் வந்தன.

மாகாணசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். அவசியமும் கூட. வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றுபட்டே இருந்திருக்கிறது.

ஆனாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தளவுக்கு மக்களுக்கான பயனை நடை முறைச்சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனை நிறைவேற்ற முடிந்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

வெறுமனே ஒரு ஆவணப்படுத்தல் முயற்சி போலவே வடக்கு மாகாணசபையில் நூற்றுக்கணக்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவே தவிர, அவற்றின் நடைமுறைச் சாத்தியப்பாடுகள் மீது துளியளவும் கவனம் செலுத்தப்படவில்லை.

அதனால், பெரும்பாலான தீர்மானங்கள் அதனை சமர்ப்பித்த, அதற்காக கைதூக்கிய உறுப்பினர்களுக்குக் கூட, இப்போது நினைவில் இருக்கிறதா என்று கூடத் தெரியாது.

அதைவிட, வடக்கு மாகாண சபை எப்போதுமே ஒரு உணர்ச்சிமிக்க சபையாகத் தான் இருந்து வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் வடக்கு மாகாண சபையை நடத்திச் செல்வதில் மஹிந்த அரசாங்கத்துக்கும் அதன் முகவரான ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் தொடங்கிய மோதல், பின்னர் அது மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான மோதலுடன் முடிந்து போயிருக்கிறது.

மத்திய - மாகாண அரசுகளுக்கிடையில் தொடர்ச்சியாக ஒரு வித உணர்ச்சிப் பிளம்பு எந்த நேரத்திலும் கனன்று கொண்டு தான் இருந்தது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றி, இப்போதும் கூட அந்த நிலையில் பெரிய வேறுபாடு இல்லை.

வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் தமக்கான வரையறைகளைத் தெரிந்து கொண்டு அந்த வட்டத்துக்குள் சிறப்பாகச் செயற்பட முனைந்திருக்கலாம்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதே அது போதிய அதிகாரங்கள் இல்லாத ஒன்றாகத் தான் இருந்தது. அதனால் தான், 1998ஆம் ஆண்டு தமிழர் தரப்பு அதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்குப் பின்னரும், பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கம், மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கிக் கொண்டு விட்டது. இந்த நிலையில் தான், வடக்கு மாகாண சபைக்காக போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டதன் விளைவாக, அரைவேக்காட்டு மாகாணசபைகளுக்காக போராடும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.

தமிழீழம், தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்று குரல் எழுப்பிய கட்சிகள் எல்லாம், மாகாண சபைகளின் அதிகாரத்துக்காக, சண்டையிடும் நிலை உருவானது.

மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், அதற்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மத்திய அரசுடன் முட்டி மோதிக் கொள்வதிலேயே வடக்கு மாகாணசபை கவனம் செலுத்தியது.

வடக்கு மாகாண சபை தனக்கான அதிகாரங்களைப் பெறுவதற்காக மத்திய அரசுடன் முட்டி மோதிய போதும், அதனால் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. இழந்து போன அதிகாரங்களில் ஒன்றைக் கூட மீளப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலமைச்சர் நிதியம் இன்னமும் கிடப்பில் தான் இருக்கிறது. காணி, அதிகாரம் கிடைக்கவில்லை. பொலிஸ் அதிகாரமும் மீளக் கிடைக்கவில்லை.

இப்படி, மத்திய அரசினால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறுவதற்காக நடத்தப்பட்ட கயிறிழுப்புகள் எதிலுமே மாகாணசபையினால் வெற்றிபெற முடியவில்லை.

அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தையும், தமிழர் பகுதியை நிர்வாகம் செய்யும் விடயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி்க் கொண்டதால் தான் வடக்கு மாகாண சபை ஒரே வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது,

அரசியல் தீர்வுக்கான போராட்டத்தை வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு மாகாண சபையை முழுமையான வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு முற்பட்டிருந்தால், இன்னும் கூடுதலான பயனை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அதைவிட வடக்கு மாகாணசபைக்குப் பெரியதொரு தலைவலியாக அமைந்தது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான உட்கட்சி பூசல் தான். வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு ஆதரவாகவும், எதிராகவும், தோன்றிய இரண்டு அணிகளால், நிலைமை மோசமடைந்தது.

அதிலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று, அங்கு விதிக்கப்பட்ட தடைகளால் இன்னமும் கூட மாகாண அமைச்சரவையைக் கூட்ட முடியாத நிலை நீடிக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரும் என்று கூற முடியாத நிலை காணப்படுகிறது.

மாகாண சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட ஐவரே அமைச்சர்களாக இருக்க முடியும். ஆனாலும், நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி இப்போதும், ஆறு பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.

இதுவே சட்டரீதியாகச் செல்லுபடியானது அல்ல. ஆனாலும், இந்த விடயத்தில் முதலமைச்சரோ அல்லது, அவருக்குக் கீழ் உள்ள அமைச்சர்களோ எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லாமல் இருக்கிறார்கள்.

முதலமைச்சர் இறங்கிச் செல்ல வேண்டியதில்லை. யாராவது ஒரு அமைச்சர் தாமாக முன்வந்து தமது பதவியை விட்டு விலகினால் கூட இந்தப் பிரச்சினை தீர்ந்திருக்கும். அதற்கும் கூட அவர்கள் தயாராக இல்லை.

இன்னும் இரண்டு மாதங்களே பதவியில் இருக்கப் போகின்ற நிலையில் கூட எந்தவொரு அமைச்சரும் தமது பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

முதலமைச்சருக்குக் காட்டும் விசுவாசமாக அவர்கள் இதனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவே முதலமைச்சருக்கும் கூட ஆபத்தாக அமையக் கூடும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தாத காலப்பகுதியினால் முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ இழப்பு ஏற்படாது. அதன் பாதிப்பு அவர்களை வாக்களித்து தெரிவு செய்த மக்களுக்குத் தான் ஏற்படும்.

வடக்கு மாகாணசபையைத் தெரிவு செய்த போது, தமிழ் மக்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புக் காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகள் எல்லாமே வீணாகிப் போன உணர்வு தான் இப்போது பலரிடம் உள்ளது.

மாகாண அரசாங்கம், தனக்கான பாதையை சரியாகத் தெரிவு செய்வதற்குத் தவறி விட்டதோ என்ற கேள்வியே எழுகிறது.

முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனை முதலமைச்சராக கொண்டும், சட்டத்தரணிகள், கல்வியாளர்களைக் கொண்ட சபையாக இருந்தும், வடக்கு மாகாண சபை எப்போதும், ஒரு கலக சபையாக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறதே தவிர, வினைத்திறன் கொண்டதாக வெளிப்படுத்தவில்லை.

கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில், வடக்கு மாகாணத்தை முன்னகர்த்துவதில் வடக்கு மாகாண அரசினால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த மாகாண சபைக் கதிரைகளுக்காக கனவு காணுவதில் அர்த்தமில்லை. அவ்வாறு செயற்பட்டால், அடுத்த சபையும் கூட இந்த இலக்குகளை அடைய முடியாமல் தான் போகும்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி