பஸ் ஒன்றில் எரிந்த நிலையிலிருந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
கம்பஹா, கெஹெல்பத்தர, தம்மிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து, கம்பஹா பொலிசார் குறித்த பஸ்ஸை சோதனையிட்டபோது, பஸ்ஸின் சாரதி இருக்கைக்கு அருகில் தீயில் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உடுகம்பொல, அஸ்கிரி வல்பொலவை வசிப்பிடமாகக் கொண்ட, மல்காந்தி எனும் 58 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த பெண், எரிவடைந்துள்ள பஸ் உரிமையாளரின் மனைவி எனவும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீப்பிடிப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை எனவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.