வாகரை பிரதேச மக்களிற்கு அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகள்!!

வாகரை பிரதேச விவசாயிகளின் தேவையாக இருந்து வந்த மின்சாரத் தேவையினை கம்பெரலிய திட்டத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் “பிப்பிஞ்சா” உற்பத்திகளை நேற்று பார்வையிட்டதுடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் “பிப்பிஞ்சா” உற்பத்தியாளர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

“வாகரை பிரதேச விவசாய மக்களை நான் முதன் முதல் சந்தித்த போது விவசாயம் செய்வதற்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும், அப்பகுதிக்கு மின்சாரம் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக வாகரை பகுதியில் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சினூடாக பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் வரவில்லை. நாங்கள் வந்தது விவசாயிகளான மக்களை கௌரவப்படுத்துவதற்கும், பொருளாதார ரீதியாக வலுப்பெற்ற ஒரு சமுகமாக நீங்கள் மாறியிருக்கின்றீர்கள்.

அதற்காக உங்களை கௌரவப்படுத்துவதற்காகவே நாங்கள் வாகரை பகுதிக்க வந்துள்ளோம். இன்று நாடளாவிய ரீதியில் பேசப்படுகின்ற ஒரு முக்கியமான விடயம் பொருளாதார பிரச்சினைகள்.

நாட்டின் பணவீக்கம் தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கின்றோம். அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையில் மாத்திரம் அல்ல உலகத்தில் எல்லா நாடுகளில் அதிகரித்துக் கொண்டு போகின்றது.

அது ஏன் என்றால் அது சமுதாய மாற்றம். நாங்கள் இன்று உள்ளுர் உற்பத்திகளை விட வெளியூர் உற்பத்திகளில் தான் எங்களுடைய ஆசை, எங்களுடைய தேவைகள் இருக்கின்றது.

இன்று பார்த்தீர்கள் என்றால் ஏராளமான உணவு பொருட்கள் இறக்குமதியில் இருக்கின்றது. அதனால் தான் எங்களது நாணய பெறுமதி குறைந்து கொண்டு போகின்றது.

அரசாங்கத்தினால் இப்போது நடைமுறைப்படுத்துனின்ற “பிப்பிஞ்சா” காய்களை உற்பத்தி செய்து, 15 ஆயிரம் மெற்றிக் தொன் அளவுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவுக்கு விவசாயிகளான நீங்கள் நாட்டுக்கு உதவி செய்திருக்கின்றீர்கள் எனத்தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எங்களது நாட்டின் ரூபாவின் மதிப்பை அதிகரிப்பதற்கு விவசாயிகளின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி