வடக்கில் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை இல்லை!!

வடமாகாணசபையில் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை இல்லை. என்பதை பதிவு செய்து கொள்கிறேன். அமைச்சர் சபை குழப்பத்திற்கு தீர்வு காண்பதற்கு இனிமேலும் முயற்சிக்க மாட்டேன் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 132வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது அவை தலைவர் மேலும் கூறுகையில்,

29.06.2018ம் திகதி தொடக்கம் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை ஒன்று வடமாகாணசபையில் இல்லை. இதனை சபை ஏற்றுக்கொண்டு பதிவு செய்து கொள்கின்றது.

இதேபோல் அரச அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் புரிந்துகொண்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவேண்டும்.

அவ்வாறு நடந்துகொள்ள தவறினால் பிற்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நீதிமன்றம் தமக்கு உத்தரவிடவில்லை. என அதிகாரிகள் நினைக்ககூடாது. நீதிமன்றம் தனித்தனியே ஒவ்வொரு கதவையும் தட்டி கூறிக்கொண்டிருக்கமாட்டாது.

அதேபோல் சபை தவறாக வழிநடத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டையும் சபை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அதனை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இதற்கு மேல் நடப்பவற்றை கணக்காய்வாளர் நாயகம் பார்த்துக் கொள்வார் என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து கூறும்போது,

29.06.2018ம் திகதிக்கு பின்னரான கடந்த 3 மாதங்களில் சிலர் தங்களை அமைச்சர்கள் என கூறிக்கொண்டு அமைச்சர்களாக செயற்பட்டிருக்கிறார்கள். படிகளை பெற்றிருக்கின்றார்கள். இது தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் அவை நிறுத்தப்படவில்லை என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் கருத்து கூறுகையில்,

மாகாணசபை பேரவையை நீங்கள் நீதிமன்றமாக மாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். அமைச்சர்களாக செயறப்பட முடியாது என்பதையும், அதிகாரிகள் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் ஆளுநர் உங்களுக்கும், பிரதம செயலாளருக்கும் அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறன நிலையில் இந்த விடயத்திற்குள் உள்ளக அரசியல் ஒன்று இருப்பதாகவே நான் கூறுகிறேன் என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,

ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் சபையை கூட்டவேண்டாம் என ஆளுநர் பணித்திருக்கின்றார். அதேபோல் முதலமைச்சருடைய ஆலோசனையை ஆளுநர் கோரியிருக்கின்றார். ஆனால் முதலமைச்சர் அதனை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார் என்றார்.

தொடர்ந்து அவை தலை வர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில்,

சபைக்கு பொறுப்புகூற கூடிய சட்டவலுவுள்ள அமைச்சர் சபை ஒன்று இல்லை. என கூறும் உரித்து எனக்குள்ளது என்றார்.

தொடர்ந்து ஆழுங்கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மின் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் ஆகியோர், எழுந்து 18ம் திகதி முதலமைச்சர் நீதிமன்றத்திற்கு போககூடாதெனவும், அதனை நான் விரும்பவில்லை எனவும் தாங்களே கூறியிருந்தீர்கள். பின்னர் தீர்வு முயற்சியிலும் ஈடுபட்டிருந்தீர்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. இவ்வாறு பேசி..பேசி ஒன்றும் நடக்காத விடயத்தை தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதால் பயன் என்ன? என கேள்வி எழுப்பினர்.

இறுதியாக பேசிய அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

முதலமைச்சர் இன்னொரு தடவை நீதிமன்றம் செல்லகூடாது என நான் கூறியதும், விரும்பியதும் உண்மை. அதேபோல் இந்த அமைச்சர் சபை குழப்பத்தை எவருக்கும் வெற்றியும் இல்லாமல், தோல்வியும் இல்லாமல் தீர்த்து வைப்பதற்கு ஒரு தடவை அல்ல 2 தடவைகள் முயற்சித்ததும் உண்மை.

ஆனால் என்னுடைய முயற்சிகள் அனைத்தும் முடக்கப்பட்டது. ஆகவே முன்னர் செய்ததைபோல் தீர்வு முயற்சிகளை அல்லது சமரச முயற்சிகளை இனிமேல் செய்யப்போவதில்லை என்றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி