ஐ.நாவிடம் கொண்டு செல்லும் புதிய யோசனை குறித்து மக்களுக்கு தெளிவு வேண்டும்!!

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனை தொடர்பில் நாட்டு மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்த வேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பது தொடர்பிலும், படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் எதிர்வரும் 25ம் திகதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் புதிய யோசனை முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேற்படி யோசனையானது ஐ.நாவின் கிளை நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த யோசனையில் எவ்வாறான விடயங்கள் உள்ளன என்பது எமக்குத் தெரியாது. தேசிய, சர்வதேச ரீதியில் பலரும் இது பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, ஐ.நாவில் அந்த யோசனையை முன்வைக்க முன்னர் இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஜனாதிபதி தெளிவுபடுத்தினால், எமது ஆலோசனைகளையும் முன்வைக்கக் கூடியதாக இருக்கும். இந்த விவகாரம் குறித்து பொது எதிரணி கூடி ஆராயும்" - என்று குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி