12 தமிழ் அரசியல் கைதிகளுக்காக போராடும் மெகசீன் சிறைச்சாலையின் 71 கைதிகள்!!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில், கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 71 அரசியல் கைதிகள் இன்று இணைந்துக் கொண்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 14ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துடன் 20 நாட்கள் கடந்ததும் மேலும் சில கைதிகள் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துக்கொண்டனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.

10 வருடங்களுக்கு மேலாக எந்த வழக்கு விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

107 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலைமையில், சிறிய தரப்பினரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது நீதியானது அல்ல என அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வரும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு, இந்த விடயம் சம்பந்தமான அரசாங்கம் அமைதியான கொள்கையை கையாண்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.


அரசியல் கைதிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 5ம் திகதி அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் அந்த அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி