பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்றைய தினம் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு பிரிவின் வழிநடத்தல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாமல் குமார, கடந்த மாதம் கண்டியில் நடத்திய ஊடக சந்திப்பில், பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வா, தம்முடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவை, வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பான சதித்திட்டம் குறித்து அதில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், தம்மையும் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினால், தமது உயிருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அச்சுறுத்தல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்ஷவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவரிடம் சுமார் இரண்டு மணிநேரம் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னதாகவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.