அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 500 பேர் கைது!

அவுஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3300 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 2013இல் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கையின் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 33 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.

அதே போல், 78 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டதில் 2,525 அகதிகள் அவுஸ்திரேலியாவை நோக்கிய படகுகளில் ஏறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆட்கடத்தல் அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாக கூறியுள்ளார்.

2013க்கு முன்னர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் என போரை எதிர்கொண்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக அவுஸ்திரேலிய கடல் பகுதிகளில் கரை ஒதுங்கினர். இது அவுஸ்திரேலியாவில் பெரும் சிக்கலாக உருவெடுத்திருந்தது.

அவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்த 5 ஆண்டு காலத்தில் ஆட்கடத்தல் தொடர்பான 600க்கும் மேற்பட்ட கைதுகள் நடந்துள்ளன.

அதில் இலங்கையர்கள் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்கடத்தல் தொடர்பான கைதுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் காரணமாக ஆபத்தான கடல் பயணங்களிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக அவுஸ்திரேலிய அரசு சொல்லிவரும் நிலையில், ஐ.நா மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இக்கொள்கையை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி