ஒபாமா உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பிய ஆசாமி கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி