அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பாக அவரிடம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று நீதிமன்றத்திற்கு சென்று வரும் நேரத்தில் எந்த முறையிலாவது தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
எப்படி கவிழ்ப்பது என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் கூறினார். இது மிகவும் பாரதூரமான கருத்து, அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அரச அதிகாரியாக பணியாற்றினார்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் முறை எப்படி என்று தெரியாது, ஆனால் அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறுவது மிகவும் பாரதூரமானது.
பல ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஒருவருக்கு நாட்டின் அரசாங்கம் எப்படி மாறும் என்பது தெரியவில்லை. அவர் பச்சிளம் குழந்தை. அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது சட்டவிரோதமான செயல்கள் எத்தனை நடத்தன.
தேர்தல் மூலம் அல்லது நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையை மாற்றி அரசாங்கத்தை மாற்றலாம். இந்த முறையில் தான் நாட்டில் அரசாங்கத்தை மாற்ற முடியும். இவற்றை தவிர அரசாங்கத்தை மாற்ற வேறு முறைகள் கிடையாது.
ஒரு முறையை அவர்கள் முயற்சி செய்து பார்த்தனர். செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்புக்கு ஜனத்தை அழைத்து வந்து கொழும்பை முற்றுகையிட்டு கொழும்பில் தங்கி, பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சிறைப்பிடித்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா என்று முயற்சித்து பார்த்தனர்.
எனினும் அது தோல்வியடைந்தது. கோத்தபாய இதனையேதும் கூறினாரோ தெரியவில்லை. அல்லது இராணுவப் புரட்சி பற்றி பேசுகிறாரோ தெரியவில்லை. காரணம் அவரது கருத்து மிகவும் பாரதூரமானது.
எந்த முறையில் அரசாங்கத்தை கவிழ்க்க போகிறார்கள் என்பது குறித்து கோத்தபாயவிடம் விசாரணை நடத்த வேண்டும்.
மக்களை கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க போகிறார்களா அல்லது இராணுவப்புரட்சியில் கவிழ்க்க போகிறார்களா அல்லது பயங்கரவாத முறையில் அரசாங்கத்தை விரட்டி ஆட்சியை கைப்பற்ற போகிறார்களா என்பது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும். என்ன முறை என்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
இதனால், சட்டத்தை அமுல்படுத்துவோர் இது சம்பந்தமாக சட்டத்தை செயற்படுத்த வேண்டும். கோத்தபாயவின் கருத்தை சாதாரண கருத்தாக கருத முடியாது.
சாதாரணமான ஒருவர் கூறிய கருத்து அல்ல. நாட்டில் பொறுப்புக் கூற வேண்டிய, பொறுப்புகளை வகித்த உயர் மட்டத்தில் இருந்த முன்னாள் அதிகாரி ஒருவரின் கருத்து இது. அவர் சிறுவன் அல்ல.
நாட்டின் சட்டங்களை அறியாதவர் அல்ல. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பற்றி அறியாதவர் அல்ல. அனைத்தையும் அறிந்தவர்.
இப்படியான அதிகாரிகள் தொலைக்காட்சிகளுக்கு எதிரில் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும்.
இதேவேளை, நாட்டில் நடைமுறையில் இருக்கு அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகத்திற்கு விடும் பாரதூரமான சவால். இதனால், கட்டாயம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.