அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று விஷேட அமர்வு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் அரசியல் கைதிகளை காப்பாற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்குமான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை காலை 11 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இது குறித்து இன்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்கள் சேர்த்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே மேற்படித் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத் தினை நடாத்தி வருகின்றனர்.

அவர்களுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே அவர்களுடைய விடுதலை தொடர்பாகவும், அவர்களுடைய உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.

இதனடிப்படையில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து பேசியிருக்கின்றார்கள்.

அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இது குறித்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் கூறுகையில்,

29 நாட்களாக அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய விடுதலைக்காக இந்த அரசாங்கமும், அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

ஆகவே பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து முதலமைச்சர் தலமையில் நாளை காலை 11 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதில் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பும் அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் கலந்து கொண்டு தங்களுடைய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி