அரசியல் கைதிகள் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு!!

2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். இவை தொடர்பில் எந்தவொரு வாக்குறுதிகளையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவர்கள் போராட்டம் நடாத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மாறி..மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை தாராளமாக வழங்கியபோதும் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தபோதும் பல விடயங்களை செய்வதாக கூறியபோதும் ஒன்றுமே செய்யவில்லை.

குறிப்பாக விசேட நீதிமன்றம் அமைப்பதாக கூறி அமைத்தார்கள். ஆனால் அந்த நீதிமன்றங்களில் அரசியல் கைதிகளின் வழக்குகள் நடைபெற்றதாக தெரியவில்லை. இதேபோல் புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பதாக கூறினார்கள் அதுவும் நடக்கவில்லை.

பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளும் காற்றில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது வழக்குகளை துரிதமாக விசாரித்து தம்மை விடுதலை செய்யவேண்டும்.

அல்லது தம்மை புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என 2 அம்ச கோரிக்கையினை முன்வைத்து கடந்த 18 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமானபோதும் இன்றளவும் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயம் போன்ற முக்கியமான விடயங்களிலாவது அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு ஏற்புடையதல்ல.. இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ளதாக செய்திகளை அறிகிறோம். இது ஏற்புடையதல்ல.

இராணுவம் இந்த நாட்டில் போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றது. அதனை ஐ.நாவின் 3 கொண்ட குழு உறுதிப்படுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு பாரப்படுத்தியுள்ளது. அது விசாரிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

அதனடிப்படையில் தாம் அதனை விசாரிப்பதாக இலங்கை அரசும் இணங்கி ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இராணுவத்தை பாதுகாப்பதற்காக அரசியல் கைதிகளுடன் இணைக்க அரசு முயற்சிக்கின்றது.

இதற்காக ஜனாதிபதி சர்வதேசத்திடம் கூறுகிறார் எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோமாம். மேலும் போரின் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாட்டைவிட்டு ஓடிவிட்டார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

நானே இறுதியில் போரை முடித்தேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நீதியை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி